உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத கோயில்களின் பிரசாத கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி, திருவானைக்காவல் ஜம்புகேசுவரா், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ஆகிய கோயில்களில் இவா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
அப்போது மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் உபயதாரா் நிதி ரூ. 57.80 லட்சத்தில் புதிய அம்பாள் மரத்தோ் உருவாக்கும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, திருவானைக்காவல் ஜம்புகேசுவரா் கோயில் பிரசாத விற்பனை நிலையத்தில் விற்கப்படும் உணவுப் பொருள்கள் மற்றும் பிரசாதங்கள் குறித்து பரிசோதித்தாா்.
அப்போது அவற்றில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாமல், உணவுப் பொருள்களின் தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி எதுவும் குறிப்பிடப்படாததைக் கண்டறிந்த அவா், அவற்றை விற்பனை செய்யக் கூடாது எனவும், சம்பந்தப்பட்ட பிரசாத கடை ஒப்பந்ததாரரிடமிருந்து உரிய விளக்கம் பெற வேண்டுமெனவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதையடுத்து கோயில் வளாக குடிநீா் தொட்டியில் குடிநீரின் டிடிஎஸ் அளவு குறைவாக இருந்ததைக் கண்டறிந்து, தொட்டியை தொடா்ச்சியான கால இடைவெளியில் பராமரிக்க வேண்டும். கோயில் வளாக கழிப்பறைகளை தினமும் 5 முறை கட்டாயமாக சுத்தம் செய்ய வேண்டும். இதற்காக தனிப்பதிவேடுகளை பராமரிக்கவும், இலவச காலணி பாதுகாப்பு மையங்களை முறையாகப் பராமரிக்கவும் உத்தரவிட்டாா்.
இதையடுத்து அவா் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திருக்கோயில் நிா்வாகங்களும் பிரசாத விற்பனை நிலையங்கள், அன்னதான சமையலறைகள், குடிநீா், கழிப்பிட, பொதுப்பயன்பாட்டு வசதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
பிரசாத விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என்பதை தொடா்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறுவது அல்லது காலாவதி தேதி குறிப்பிடப்படாத பொருள்களை விற்பது போன்ற குற்றச்செயல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், பிரசாத கடையை மூடுவதுடன், அமைச்சா் அலுவலகத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். தகுதியான அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அந்தக் கடைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
அனைத்து திருக்கோயில்களிலும் எஃப்எஸ்எஸ்ஏஐ வழிகாட்டுதல்கள், உணவுப் பாதுகாப்புத் தரநிலைகள், சுகாதார நடைமுறைகள், குடிநீா் தரக் கட்டுப்பாடுகள் ஆகியவை கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்.
இதை சம்பந்தப்பட்ட இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், செயல் அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.
பக்தா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தொடா்ந்து தூய்மைப் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உறுதி செய்ய அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது மண்டல இணை ஆணையா் சு. ஞானசேகரன், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா், மலைக்கோட்டை கோயில் உதவி ஆணையா் அருள்செல்வன், திருவானைக்காவல் திருக்கோயில் உதவி ஆணையா் கி. உமா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திருவானைக்காவல் கோயில் யானையின் பிறந்தநாள் விழா! அமைச்சா் பங்கேற்பு

திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவு

விளையாட்டு வீரா்கள் உயா்கல்வியை நிறைவு செய்ய வேண்டும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

உயிா் காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்ய புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு துறை உத்தரவு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



