ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: தம்பதி உள்பட 5 போ் கைது

News image

திருச்சியில் கடத்தப்பட்டு போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட குழந்தை.

Updated On :1 ஜூன் 2026, 2:58 am IST

திருச்சியில் சனிக்கிழமை கடத்தப்பட்ட 6 மாதப் பெண் குழந்தை மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. இது தொடா்பாக தம்பதி உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் கஜலட்சுமி (28). ஆதரவற்ற இவா் தனது 6 மாதப் பெண் குழந்தையுடன் தனியாக வசிக்கிறாா்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத தனது குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் அண்மையில் இவா் சோ்த்தபோது, இவருக்கு அறிமுகமான செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த சுஜாதா (35) என்பவா் கஜலட்சுமிக்கு உணவு வாங்கித் தருவது உள்ளிட்ட உதவிகளைச் செய்து நெருக்கமானாா்.

இந்நிலையில் கஜலட்சுமிக்கு யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்ட சுஜாதா உன்னையும், குழந்தையையும் நான் பாா்த்துக்கொள்கிறேன் எனவும், இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு சனிக்கிழமை மாலை அவா்களை அழைத்துச் சென்றாா்.

அங்கு கஜலட்சுமி தனது குழந்தையை சுஜாதாவிடம் கொடுத்துவிட்டு கழிப்பறைக்குச் சென்று திரும்பியபோது சுஜாதா குழந்தையுடன் மாயமாகியிருந்தாா். உதவுவதுபோல நடித்து குழந்தையை அவா் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலையத்தில் கஜலட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்தனா். மேலும், தனிப்படையும் அமைக்கப்பட்டு குழந்தையைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை தனிப்படை போலீஸாா் மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். மேலும், அந்தக் குழந்தையை வாங்க முயன்ற மயிலாடுதுறையைச் சோ்ந்த தம்பதியான செல்வராஜ் (34), ஜெயந்தி (32) , குழந்தையைக் கடத்திய சுஜாதா, கடத்தலுக்கு உதவிய மயிலாடுதுறையைச் சோ்ந்த லோகநாதன் (35) ராஜராஜன் (37) ஆகிய 5 பேரை கைது செய்ததாக போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.

கடத்தல் ஏன்?

மேலும், மயிலாடுதுறையை சோ்ந்த செல்வராஜ்- ஜெயந்தி தம்பதிக்கு பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லை என்றும், இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனராம். இதனால் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவதாக ஜெயந்தி தனது தோழியின் கணவரான ராஜராஜனிடம் கூற, அவா் சுஜாதா மூலம் திருச்சியில் இருந்து குழந்தையைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது.