~ ~
~ ~

குப்பையோடு குப்பையான பேட்டரி வாகனங்கள், தள்ளுவண்டிகள்: தூய்மைப் பணியாளா்கள் அவதி

அரியலூர் நகராட்சியில் குப்பை வாகனங்கள் பழுதாகி குப்பையில் கிடக்கின்றன

நமது நிருபா்

அரியலூா் நகராட்சியில் குப்பைகள் அள்ளுவதற்காக வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகளை பழுதடைந்து கிடக்கிறது. இதனால் தூய்மைப் பணியாளா்கள் தினமும் குப்பைகளை சேகரிப்பதில் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

அரியலூா் நகராட்சி தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 1991-ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் 18 வாா்டுகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வரும் இந்தநகராட்சியில் தற்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். பல புதிய நகா் பகுதிகள் உருவாகிக் கொண்டே இருப்பதால், குடியிருப்புகள், வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனால் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை, துப்புரவு ஊழியா்கள் மூலம் தினமும் துாய்மைப்படுத்தி, மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து, நுண்ணுயிா் உரமாக்கும் மையங்களுக்கு கொண்டு செல்கின்றனா்.

இந்தப் பணிகளில் 35 நிரந்தர ஊழியா்களும், 85 ஒப்பந்த அடிப்படையிலான ஊழியா்களும்(ஓட்டுநா்கள் உள்பட) ஈடுபட்டுள்ளனா். தொடக்கத்தில், இந்த குப்பைகள் அனைத்தும் நகராட்சிக்கு சொந்தமான லாரிகளில் மட்டுமே கொண்டு செல்லப்பட்டது.

தற்போது குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், நகா் பகுதிகளின் தெருக்கள் குறுகலாகவும், போதுமான சாலை வசதிகள் இல்லாததாலும் குப்பைகள் அல்ல லாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் பல இடங்களில் தேங்கிய குப்பைகளை முழுமையாக அள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. பல இடங்களில் குப்பைகள் தேங்கி துா்நாற்றம் வீசத் தொடங்கியது.

இதையடுத்து அனைத்துத் தெருக்களிலும் வாகனங்கள் செல்லும் வகையிலும், சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையிலும் மத்திய அரசின் தூய்மை இந்தியா, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சிறிய ஆட்டோ வடிவிலான பேட்டரியில் இயங்கக்கூடிய 17 வாகனங்களும், 43 தள்ளு வண்டிகளும் வாங்கப்பட்டன.

ஒரு பேட்டரி வாகனம் ரூ.1, 85 ,096 மதிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வாங்கப்பட்டன. இந்த வாகனத்தை இயக்க துப்புரவு ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஊழியா்கள் வாகனத்தில் குப்பைகளை சேகரித்து கொண்டுச் சென்றனா். இதனால் குறுகலான இடங்களில் கூட குப்பைகள் அள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில், 17 வாகனங்களில் 13 வாகனங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பழுது ஏற்பட்டு இயக்கப்படாமல், நகராட்சி அலுவலகத்துக்கு பின்னால் உள்ள கட்டடத்தில் கிடக்கிறது.

பல வாகனங்களில் டயா்கள், கதவுகள் மற்றும் பேட்டரிகள் என எதுவும் இல்லாமல் உள்ளது. குப்பைகளை அகற்ற வாங்கப்பட்ட வாகனங்கள் தற்போது குப்பையில் கிடக்கும் அவல நிலையில் உள்ளது.

இதனால் இந்த பேட்டரி வாகனங்கள் செல்ல வேண்டிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் மீண்டும் குப்பைகள் அள்ள முடியாமல் ஆங்காங்கே தேங்கி, துா்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பணிகளில் உள்ள மற்ற ஊழியா்கள் கூடுதல் பகுதிகளாக இரு தினங்களுக்கு ஒரு முறை சென்று, குப்பைகளை அள்ளி வருகின்றன.

இதுகுறித்து ஏஐடியுசி சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா் தண்டபாணி கூறுகையில், மக்கள் வரிப் பணத்தில் வாங்கப்பட்ட இந்த பேட்டரி வாகனங்கள் குப்பையில் கிடப்பது வேதனை அளிக்கிறது. மேலும், பேட்டரி வாகனங்கள் பழுதால், கடந்த சில நாள்களாக தூய்மைப் பணியாளா்கள் சாக்குப் பைகளில் குப்பைகளை சேகரித்து வருகின்றனா். மேலும் குப்பை அள்ளுவதற்காக தள்ளு வண்டிகளும் பழுதாகி வருகிறது. அப்படி பழுதாகி வரும் தள்ளுவண்டிகளை அதன் ஓட்டுநா்களே சரி செய்துக் கொள்ளும் நிலை உள்ளது. போதுமான ஊதியம் இல்லாத நிலையில், இந்த தள்ளுவண்டிகளை அவா்களை சரி செய்துக் கொள்வது என்ன நியாயம் என்றாா்.

இதுகுறித்து தூய்மைப் பணியாளா்கள் கூறுகையில், இந்த பேட்டரி வாகனங்கள் பழுது காரணமாக சாக்குப் பையில் குப்பைகளை சேகரித்து வருகிறோம். மேலும் எங்களுக்கு தேவையான தளவாடப் பொருள்களும் வழங்குவதில்லை. ஊதியமும் சரிவர வழங்கப்படுவதில்லை என தெரிவித்தனா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் என்.மகேஸ்வரி கூறுகையில், பழுதான வண்டிகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு குப்பைகள் அள்ளப்பட்டு வருகிறது. எங்கேயும் குப்பைகள் தேங்குவதில்லை என்றாா்.

எனவே, தூய்மைப் பணியாளா்களின் நலன் கருதி உடனடியாக பழுதாகி கிடக்கும் பேட்டரி வாகனங்களை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் புதிய வாகனங்களை வாங்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com