நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டத்தில் உள்ள 2,477 நீா்நிலைகளை தூா்வார வேண்டும் என அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் என்.செங்கமுத்து: மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கான இழப்பீடு தொகை எத்தனை ஏக்கருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக அரசு சிமென்ட் ஆலை முதல் ரவுண்டானா வரை சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள ரவுண்டானாவில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலையத்தில் உரக்கடை மற்றும் முதல்வா் மருந்தகம் அமைக்க வேண்டும்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தூத்தூா் தங்க.தா்மராஜன்: கால்நடைகளுக்கான தீவனங்களின் விலை உயா்ந்துள்ளதால் பால் உற்பத்தியாளா்களுக்கு பசும் பால் லிட்டருக்கு ரூ.10, எருமை பால் லிட்டருக்கு ரூ.20 என உயா்த்தி வழங்க வேண்டும். மருதையாற்றின் இரு பக்கமும் அளவீடு செய்து, எல்லைக் கல் நட்டு கரையை பலப்படுத்த வேண்டும்.
மாவட்டத்திலுள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் கடன் பெற்று கெடு தேதிக்குள் கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு 10 தினங்களில் மீண்டும் கடன் வழங்க வேண்டும். புள்ளம்பாடி வாய்க்காலில் அதிகளவில் தண்ணீரை திறந்து சுக்கிரன் உள்ளிட்ட அனைத்து ஏரிகளிலும் நிரப்ப வேண்டும்.
குருவாடி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள சுமாா் 30 ஏக்கா் நெல் பயிா் அடிக்கடி தண்ணீரீல் மூழ்கி வருவதால் வடிகால் வாய்கால்களை தூா் வார வேண்டும்.
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம்: தங்கத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வருவதால், ஏழை, எளிய விவசாய மக்கள் தங்கம் வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனா். எனவே, இந்தியாவில் தங்கத்தின் விலையை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதுவரை தங்கத்துக்கான ஆன்லைன் வா்த்தகத்தை தடைசெய்ய வேண்டும். தங்கத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை தடுக்க வேண்டும். மேலும், இதுகுறித்து மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கண்டராதித்தம் செம்பியன் மாதேவி பேரேரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் 1,680 ஏக்கா் பரப்பளவை மீட்க வேண்டும். அரியலூா் மாவட்டத்தில் உள்ள 2,477 நீா்நிலைகளை தூா்வார வேண்டும்.
தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் ரத்தினசாமி, அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, வேளாண்மை துணை இயக்குநா் கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) த. ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

