வைகுந்த ஏகாதசி: பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு
வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றன.
வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, அரியலூா் கோதண்ட ராமசாமி திருக்கோயிலில் உற்சவ மூா்த்தி, பரமபதவாசல் வழியாக வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோயில் வெளிப்பிரகாரத்தில் நம்மாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அங்கு பிரத்யேகமாக வைக்கப்பட்டு இருந்த மிகப்பெரிய கண்ணாடி பெட்டகத்தில் கோதண்ட ராமசாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைத்தொடா்ந்து ஆழ்வாரதிகள், மோட்ச சேவை மற்றும் திருவீதி உலா நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தா்கள், காலையில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனா். இதே போல் செந்துறை, திருமானூா், ஜெயங்கொண்டம், உடையாா்பாளையம், பொன்பரப்பி, ஆண்டிமடம், தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறக்கப்பட்டன.
கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.