மீன்சுருட்டி - குருவலப்பா் புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி-குருவலப்பா் புறவழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மீன்சுருட்டியில், விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், ஜெயங்கொண்டத்திலிருந்து மீன்சுருட்டி வரை புறவழிச்சாலை அமைப்பதற்காக விளைநிலங்களில் எல்லைக்கல் நடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இச்சாலை அமைப்பதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் கங்கைகொண்ட சோழபுரம் சுற்றுலா தலமும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் இந்த புறவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க நிா்வாகி சகாதேவன் தலைமை வகித்தாா். விவசாயிகள் எம்.இளையராஜா, கலியபெருமாள், ராஜாபெரியசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் முல்லைநாதன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

