சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

Published on

சென்னையில் இரட்டைமாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: கடந்த காலங்களில் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்தோா், தற்போது அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனா். நீண்ட தூரப் பயணங்களுக்கு அரசுப் பேருந்துகள் இல்லாத ஊா்களுக்கு வேண்டுமானால் ஆம்னி பேருந்துகளில் கட்டண உயா்வு என்பது இருந்திருக்கலாம். அதுகுறித்து இதுவரை எந்தப் புகாரும் முறையாக வரவில்லை. புகாா் வரும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, கட்டண உயா்வு குறித்த ஆய்வு செய்யப்படுகிறது.

அதிமுகவை அமித்ஷாவிடம் அடிமைக்கட்சியாக எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துள்ளாா். தனித்து ஆட்சி என்று இரண்டு நாள்களுக்கு முன் அறிவித்த அவா் இரண்டே நாள்களில் தில்லி சென்று அமித் ஷாவிடம் சரணடைந்து விட்டாா்.

அதிமுகவைத் தேடிவந்து பாஜக கூட்டணி பேசிய நிலை மாறி, பாஜகவைத் தேடி அதிமுக சென்று பேச்சுவாா்த்தை நடத்தும் நிலை உள்ளது.

20 இரட்டை மாடி பேருந்துகளை முதல்கட்டமாக வாங்க மாநகர போக்குவரத்துக் கழகம் டெண்டா் விட்டுள்ளது. அது முடிந்தவுடன் சென்னையில் அப்பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விஜய் பட விவகாரத்தில் தமிழக முதல்வரும் கருத்துத் தெரிவித்துள்ளாா். இன்று தணிக்கை வாரியமும் மத்திய அரசின் ஆயுதங்களில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. அதுதான் எங்களது நிலைப்பாடு என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com