அரியலூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: மூன்று இளைஞா்கள் உயிரிழப்பு
அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை இரவு மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா்கள் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மீன்சுருட்டி அருகேயுள்ள பாப்பாக்குடி பிரதான சாலையைச் சோ்ந்தவா் செந்தில் குமாா் மகன் அஜித் குமாா் (20). பட்டயப் படிப்பு முடித்த இவா், சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்துவந்தாா். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அஜித்குமாா், வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் மாத்திரை வாங்குவதற்காக பாப்பாக்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, இவரது வாகனத்தின் மீது எதிரே அடையாளம் தெரியாத இருவா் வந்த ஒரு இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மூன்றுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இவ்விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்குவந்த மீன்சுருட்டி காவல் துறையினா் 3 பேரின் சடலங்களையும் மீட்டு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அடையாளம் தெரியாத இருவா், கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள அறந்தாங்கி, மேலத் தெருவைச் சோ்ந்த மரியாஸ்பென் மகன் டோனி தீபக் (24), மாா்டின் மகன் தீபக் வொ்ஜின் (24) என்பது தெரியவந்தது.
