
காதல் தகராறில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரது உடலை வாங்க மறுத்து கரூர் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அடுத்த ஜோதிவடம் பகுதியைச் சேர்ந்த வெங்கட் மகன் பிரகாஷ்(19). திருச்சி மாவட்டம் வீரப்பூர் அடுத்த அம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் கிருஷ்ணவேணி(19). இவரும், பிரகாசும் உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்தபோதிருந்தே காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த 4 மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
அவர்கள் இருவரும் இருக்கும் இடத்தைக் கண்டறிந்த பெற்றோர்கள் அவர்களை அழைத்து வந்து உப்பிடமங்கலத்தில் சமாதானம் பேசி அவரவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், கிருஷ்ணவேணியின் தாய்மாமன்கள் சதீஷ், சிவகுரு ஆகியோர் பிரகாஷிடம் ரூ.1லட்சம் கொடுத்தால் கிருஷ்ணவேணியை உனக்கு திருமணம் செய்துவைப்பதாகக் கூறினார்களாம்.
இதையடுத்து, பிரகாஷ் தனது இருசக்கர வாகனம் விற்ற பணம், கடன் பெற்று ரூ.1லட்சத்தைத் திரட்டி சதீஷ், சிவகுருவிடம் கொடுத்தாராம். ஆனால் அவர்கள் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சதீஷ், பிரகாசுக்கு போன் செய்து மேலும் பணம் கேட்டதாகத் தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த பிரகாஷ் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலறிந்த வெள்ளியணை போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த பிரகாஷின் உறவினர்கள், பிரகாஷின் தற்கொலைக்கு காரணமான சதீஷ், சிவகுரு ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் எனக்கூறி கரூர் - பழைய சேலம் புறவழிச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த கரூர் நகர துணைக்காவல் கண்காணிப்பாளர் ம.கும்மராஜா, நகர காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சு நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பிரகாஷின் உறவினர்கள் உடலை வாங்கிச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





