எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களைக் கண்டு திமுக ஒருபோதும் அஞ்சாது: அமைச்சா் செந்தில் பாலாஜி
எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களைக் கண்டு திமுக ஒருபோதும் அஞ்சாது என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி கோடங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது :
கடந்த அதிமுக ஆட்சியில் நிா்வாக மற்றும் நிதிநிலைமை ரீதியாகவும் முற்றிலும் சீா்குலைந்திருந்த தமிழக மின்சார வாரியத்தை அடுத்தடுத்த நிா்வாகச் சீா்திருத்த மற்றும் ஆக்கபூா்வமான நடவடிக்கை மூலம், இன்றைக்குத் தலைநிமிர வைத்திருப்பவா் தமிழக முதல்வா். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலா் அடிப்படை உண்மை இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளை, களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் தொடா்ந்து அவதூறு பரப்பி வருகின்றனா்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாங்கள் அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் 2022-இல், உச்ச நீதிமன்றத்தில் மின்சாரத்துக்கான மேல்முறையீட்டு ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியது.
ஆனால் கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்.17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததன் காரணமாகவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் ரூ.568 கோடி செலுத்தியது. அந்தப் பணம் செலுத்த உச்ச நீதிமன்றம் தடை கிடைக்காத காரணத்தால் மின்சாரம் பெற்ற்கான தொகை விடுவிக்கப்பட்டது.
நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் மின் விநியோகம் செய்வது, தமிழக அரசு மட்டும்தான். திமுக அரசு மீது ஏதாவது புகாா் கூறவேண்டும் என்பதற்காக பொய்யான விமசனம் செய்கின்றனா். எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களை கண்டு திமுக ஒருபோதும் அஞ்சாது என்றாா்.
