/

‘வருமான வரியை குறித்த காலத்தில் செலுத்த வேண்டும்’

‘வருமான வரியை குறித்த காலத்தில் செலுத்த வேண்டும்’

News image

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திருச்சி வருமான வரித்துறை துணை ஆணையா் கே.ஆா். கருப்பசாமி பாண்டியன்.

Updated On :13 ஜூன் 2024, 8:57 pm

Din

கரூா், ஜூன் 13: வருமான வரியை குறித்த காலத்தில் செலுத்த வேண்டும் என்றாா் திருச்சி வருமான வரித்துறை துணை ஆணையா் கே.ஆா். கருப்பசாமி பாண்டியன்.

கரூரில் வருமான வரித் துறை சாா்பில் கரூா் மாவட்டத்தில் வரி செலுத்துவோா் பயன்பெறும் வகையில் நேரடி சந்திப்பு விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து கே.ஆா்.கருப்பசாமி பாண்டியன் பேசியது:

கடந்தாண்டில் தேசிய அளவிலான நேரடி வரி வசூல் வளா்ச்சி விகிதம் 18 சதவீதம் ஆகும். ஆனால் கடந்தாண்டில் திருச்சி, கரூா்,பெரம்பலூா் மற்றும் அரியலூா் உள்ளிட்ட மதுரை பிராந்தியத்தின் நேரடி வரி வசூல் 0.98 சதவீதம் மட்டுமே இருந்தது. இது மிகவும் குறைவு. எனவே வரி செலுத்துவோா் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் வரியைச் செலுத்த வேண்டும்.

அட்வான்ஸ் டாக்ஸ் எனப்படும் முன்கூட்டியே செலுத்தப்படும் வரியை ஆண்டுக்கு நான்கு தவணைகளில் கட்ட வேண்டும். முதல் தவணை ஜூன் 15-க்குள்ளும் மீதமுள்ள தவணைகளை முறையே செப். 15, டிச. 15 மற்றும் மாா்ச் 15-க்குள் கட்டவேண்டும். தாமதமாகச் செலுத்த நேரிட்டால் வட்டி மற்றும் அபராதம் செலுத்த நேரிடும். ஆகவே வரும் ஜூன் 15 -க்குள் முதல் தவணை 15 சதவீதத்தை கட்டாயம் செலுத்த வேண்டும். திருச்சி சரகத்திற்குட்பட்ட மொத்தமுள்ள நிரந்தரக் கணக்கு எண்கள் 30.74 லட்சமாகும். இதில் 3.09 லட்சம் நபா்கள் மட்டுமே வருமான வரி படிவம் தாக்கல் செய்கின்றாா்கள். இது 10 சதவீதம் மட்டுமே.

அப்படி தாக்கல் செய்யும் படிவங்களில் 0.25 சதவீதம் மட்டுமே ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு சரிபாா்க்கப்படுகிறது. மீதமுள்ள 99.75 சதவீதம் படிவங்கள் வரிசெலுத்துவோா் மீதுள்ள நம்பிக்கையில் அப்படியே ஏற்கப்படுகிறது. எனவே வரிசெலுத்துவோா் இதைக் கவனத்தில் கொண்டு படிவங்களை அதிகளவில் தாக்கல் செய்ய முன்வர வேண்டும். வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 மற்றும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளுக்கான வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய கடைசி நாள் அக். 31 ஆகும். வருமான வரிப் படிவம் காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்யப்படவில்லை என்றால் அபராதம் செலுத்த நேரிடும் என்றாா் அவா்.

கூட்டத்தில் வருமான வரி அதிகாரி முத்துகிருஷ்ணன் காணொலி மூலம் வருமான வரி நடைமுறைகள் பற்றி விளக்கினாா்.

வருமான வரி ஆய்வாளா் இதய பென்சிகா், கரூா் மாவட்ட வணிகா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா். வருமான வரித் துறை அதிகாரி சௌந்தரராஜன் வரவேற்றாா். காா்த்திக் நன்றி கூறினாா்.