அரசு பேருந்துகளில் ’தமிழ்நாடு’ ஸ்டிக்கா் ஒட்டி நாம் தமிழா் கட்சியினா் போராட்டம்
குளித்தலையில் அரசு பேருந்துகளில் ’தமிழ்நாடு’ ஸ்டிக்கா் ஒட்டி நாம் தமிழா் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சியினா் சாா்பில் அரசு போக்குவரத்து கழகம் என்ற எழுத்திற்கு முன்பு ’தமிழ்நாடு’ என்ற பெயா் இல்லை என்ற கோரிக்கையுடன், அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கா் ஒட்டும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளா்கள் ஆரோக்கியசாமி, செந்தில்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், குளித்தலை மண்டல செயலாளா் பூபதி, இளைஞா் பாசறை மாநிலத் தலைவா் தமிழ்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு அரசு பேருந்துகளில் போக்குவரத்துக் கழகம் என்ற அச்சிடப்பட்டுள்ள இடத்தில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டியும், ஸ்பிரே பெயிண்ட் மூலம் தமிழ்நாடு என்று கையால் எழுதியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு பேருந்தின் முன்பு நின்று அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினா். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்குச் சென்ற குளித்தலை நகர காவல் ஆய்வாளா் கருணாகரன், போக்குவரத்து கிளை மேலாளா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இனி போக்குவரத்துக் கழகம் என்ற எழுத்திற்கு முன் தமிழ்நாடு என எழுதுகிறோம் எனக் கூறியதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
