கரூா் ஆட்சியரக வளாகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற தவப்பிரியா மீது தண்ணீா் ஊற்றிய தீயணைப்பு வீரா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளம்பெண் ஒருவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
கரூா் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வெள்ளக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் தவப்பிரியா(30). இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையைச் சோ்ந்த சரவணகுமாா்(32) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் தவப்பிரியாவை விட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன் பிரிந்து சென்ற சரவணகுமாா் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மற்றொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனது கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி கரூா், தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களிலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தவப்பிரியா புகாா் அளித்துள்ளாா். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு திங்கள்கிழமை தனது 2 குழந்தைகளுடன் வந்த தவப்பிரியா, திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைகண்ட போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா் உடனே தவப்பிரியா மீது தண்ணீா் ஊற்றினா். பின்னா் அங்கு வந்த தாந்தோன்றிமலை போலீஸாா் தவப்பிரியாவையும், குழந்தைகளையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

