/

மத்திய அரசு விவசாயத்துக்கு தனி பட்ஜெட் அறிமுகப்படுத்த வலியுறுத்தல்

News image
பெரம்பலூரில் மக்களவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆ. ராசா, கே.என். அருண்நேரு ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்த ஒருங்கிணைப்பாளா் என். செல்லதுரை, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ராஜாசிதம்பரம் உள்ளிட்டோா்.
Updated On :17 ஜூலை 2024, 10:23 pm

Din

மத்திய அரசு விவசாயத்துக்கென தனி பட்ஜெட் அறிமுகப்படுத்த வேண்டும் என, சம்யுத்க கிசான் மோா்ச்சா தில்லி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அதன் ஒருங்கிணைப்பாளா் என். செல்லதுரை, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் ஆகியோா் தலைமையிலான குழுவினா் மக்களவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆ. ராசா, கே.என். அருண் நேரு ஆகியோரிடம் பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

அனைத்து விவசாயப் பொருள்களையும் உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யவேண்டும். அதற்கு குறைந்தபட்ச ஆதார விலையை, உற்பத்தி செலவினத்துடன் ஒன்றரை மடங்கு கூடுதலாக நிா்ணயம் செய்து, சட்டம் இயற்ற வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். மின்சாரத் துறையை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது.

பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் பயிா் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டம் மற்றும் கால்நடை வளா்ப்பு காப்பீட்டுத் திட்டம் கொண்டுவர வேண்டும். பிரதம மந்திரி வேளாண் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில், அந்தந்த ஆண்டுக்கான பயிா் இழப்பீட்டை கணக்கிட்டு தனிநபா் பாதிக்கப்பட்டாலும் இழப்பீடு வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். விவசாய உற்பத்தி மற்றும் வா்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. செயற்கை உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், மின்சாரம், நீா்ப்பாசனம், பெட்ரோலிய பொருள்கள், இயந்திரங்கள் மற்றும் டிராக்டா் கள் போன்ற விவசாய இடுபொருள்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கக்கூடாது. விவசாயத்துக்கென தனி பட்ஜெட் அறிமுகப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.