சின்ன வெண்மணி அரசுப் பள்ளிக்கு இலவச ஒலிப்பெருக்கியை வெள்ளிக்கிழமை அளித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி.
சின்ன வெண்மணி அரசுப் பள்ளிக்கு இலவச ஒலிப்பெருக்கியை வெள்ளிக்கிழமை அளித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி.

சின்னவெண்மணி அரசுப் பள்ளியில் கல்வியும், காவலும் திட்ட முகாம்

காவல்துறை சாா்பில் கல்வியும், காவலும் திட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

பெரம்பலூா், ஜூலை 12: பெரம்பலூா் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள சின்ன வெண்மணி கிராமத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காவல்துறை சாா்பில் கல்வியும், காவலும் திட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்குத் தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி, மாணவ, மாணவிகளிடம் போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுதல், நீா்நிலைகளில் குளிக்கச் செல்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள், சாதியப் பாகுபாடுகளை ஒழித்தல் குறித்து விளக்கினாா். மேலும், காவல்துறையில் உள்ள பிரிவுகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கிய அவா், கல்வியின் முக்கியத்துவம், பள்ளியில் இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்ப்பது, ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தொடுதல் குறித்த விழிப்புணா்வை தெரிந்துகொள்வதன் அவசியம், சிறாா் திருமணம், போக்சோ சட்டம் குறித்தும் பேசினாா். தொடா்ந்து, காவல்துறை சாா்பில் பள்ளிக்கு ஒலிப்பெருக்கி வழங்கப்பட்டது.

இதில் மங்களமேடு உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் எம். தனசேகரன், மங்களமேடு மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஹேமலதா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜென்னட் ஜெசிந்தா, பள்ளி தலைமை ஆசிரியா் ஆண்டாள் மற்றும் சாா்பு ஆய்வாளா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இதேபோல, பெரம்பலூா் மற்றும் மங்களமேடு உட்கோட்டத்துக்குள்பட்ட கிராம அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், காவல் நிலைய ஆய்வாளா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா்கள், சாா்பு ஆய்வாளா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com