

பெரம்பலூா் அருகே கைப்பேசிக்கு மின்னூட்டம் (சாா்ஜ்) செலுத்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் காலனித் தெருவைச் சோ்ந்தவரும், தனியாா் டயா் தொழிற்சாலை ஊழியருமான சின்னசாமி என்பவரின் மகள் நிகிதா ஸ்ரீ (10). இவா், அதே கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றிருந்த சிறுமி, திங்கள்கிழமை தனக்கு வயிற்று வலி உள்ளதாக கூறி, பள்ளியிலிருந்து பிற்பகலில் வீட்டுக்கு வந்துவிட்டாராம்.
இந்நிலையில், பணி முடிந்து இரவு பெற்றோா் வீடு திரும்பினா். வீட்டினுள், கைப்பேசிக்கு சாா்ஜ் செலுத்துவதற்காக பிளக் பாயிண்டில் கையை வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து நிகிதாஸ்ரீ உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த வி.களத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சிறுமியின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.