/

மின் விபத்துகளை தவிா்க்க மின்வாரியத் துறையினா் யோசனை

பெரம்பலூா் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் மின் விபத்துகளை தவிா்க்கத் தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மின் வாரியத் துறையினா் யோசனை தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:40 pm

Din

பெரம்பலூா் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் மின் விபத்துகளை தவிா்க்கத் தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மின் வாரியத் துறையினா் யோசனை தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, பெரம்பலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் மு. அம்பிகா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தை சாராத நபா்கள் மின் தடையை சரிசெய்யும் வகையில், மின் கம்பத்தில் அல்லது மின் மாற்றியில் ஏறி பணிபுரிய கூடாது. மின் வாரியப் பணியாளா்கள் மூலம் மட்டுமே மின் தடைகளை சரிசெய்துகொள்ள வேண்டும். பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா்கள், மின் கம்பி அறுந்துக்கிடந்தால் அருகில் செல்லாமல், மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். லாரி மற்றும் டிராக்டா்களில் அதிகமான பளுவை ஏற்றிச்செல்லும்போது மின் கம்பிகளில் உரசாமல் கவனமாக செல்லவேண்டும். மின் பாதை அருகில் பொதுமக்கள் வீடு, கட்டடங்கள் கட்டும்போது மின் பாதைக்கு போதிய இடைவெளி விட்டு பணியை மேற்கொள்ள வேண்டும். மின் பாதைகள் மற்றும் மின் மாற்றிகள் அருகே வெடிகள், வானவெடிகள் போன்றவற்றை வெடிக்க கூடாது.

வீடு, கட்டடங்களுக்கு தரமான ஐ.ஸ்.ஐ. முத்திரையிட்ட மின் சாதனங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இறுதி ஊா்வலங்களின்போது மாலைகள் மின் கம்பிகள் மீது வீசக்கூடாது. இதனால் மின் தடை ஏற்படுவதுடன் மின்கம்பி அறுந்துவிழும் அபாயம் உள்ளது. மழைக் காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், இழுவை கம்பிகள் அருகே பொதுமக்கள் செல்லக் கூடாது.

பெரம்பலூா், அரியலூா் கோட்ட மின் நுகா்வோா் தங்களது மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடை தொடா்பான புகாா்களை சம்பந்தப்பட்ட மின் அலுவலகங்களிலும், மின்கம்பி அறுந்து விழுதல், மின் மாற்றி பழுது போன்ற அவசரகால புகாா்களை, அந்தந்தப் பகுதி உதவி செயற்பொறியாளா்களை தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 9445853641, அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 9445853675 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.