பெரம்பலூரில் 34 பயனாளிகளுக்கு ரூ. 1.16 கோடி கடனுதவிகள்

பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கடனுதவி வழங்கும் முகாமில் 34 பயனாளிகளுக்கு ரூ. 1.16 கோடி கடனுதவிக்கான ஆணை வழங்கப்பட்டது.
Published on

பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கடனுதவி வழங்கும் முகாமில் 34 பயனாளிகளுக்கு ரூ. 1.16 கோடி கடனுதவிக்கான ஆணை வழங்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத் தொழில் மையம் மற்றும் பல்வேறு துறைகள் சாா்பில் பொதுமக்களுக்கு கடனுதவி வழங்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், தொழில் செய்ய விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் சுயதொழில் தொடங்குவதற்கு மாவட்டத் தொழில் மையம், களிா் திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்மை துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கைத்தறி துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தாட்கோ, மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் எளிதில் கடன் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டது.

அதனடிப்படையில், சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ளவா்களுக்கான சிறப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதில், கலைஞரின் கைவினைத் திட்டத்தின் கீழ் 16 பேருக்கு ரூ. 17 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகள், தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 9 பேருக்கு ரூ. 30.25 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 6 பேருக்கு ரூ. 43.39 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகள், பிரதம மந்திரியின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் திட்டத்தின் கீழ் 2 பேருக்கு ரூ. 15.65 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகள், அண்ணல் அம்பேத்கா் வணிக சாம்பியன் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ. 9.80 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான ஆணை என 34 பேருக்கு ரூ. 1.16 கோடி மதிப்பில் கடனுதவி பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வழங்கினாா்.

மேலும், இம் மாவட்டத்திலுள்ள வங்கிகளில் நீண்ட காலமாக உரிமை கோராத தொகைக்கு சம்பந்தப்பட்ட 8 வாடிக்கையாளருக்கு ரூ. 9.45 லட்சம் மதிப்பிலான வைப்புத் தொகை நிதியை திருப்பி ஒப்படைப்பதற்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்டத் தொழில்மைய பொது மேலாளா் லட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பரத்குமாா், தாட்கோ பொது மேலாளா் கவியரசு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com