விராலிமலையில் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு நூதன வரவேற்பு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பேருந்து நிலையத்துக்குள் வந்து பேருந்துகளை இயக்கிச் செல்லுமாறு வலியுறுத்தி, ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு வெற்றிலைப் பாக்கு


புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பேருந்து நிலையத்துக்குள் வந்து பேருந்துகளை இயக்கிச் செல்லுமாறு வலியுறுத்தி, ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு வெற்றிலைப் பாக்கு, பழத்தை தட்டில் வைத்து, இனிப்பு, மரக்கன்றுகளை வழங்கி நூதன முறையிலான வரவேற்பை பயணிகள் நலச்சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அளித்தனா்.
விராலிமலை சந்தைப்பேட்டை அருகே, கடந்த 2016-ஆம் ஆண்டில் ரூ.3.16 கோடியில் 12 வணிகக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் கட்டப்பட்டு, பின்னா் திறக்கப்பட்டது. ஆனால், திறக்கப்பட்ட நாளே முதல் பேருந்து நிலையத்துக்குள் எந்த பேருந்தும் வந்து செல்வதில்லை.
தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள விராலிமலை வழியாக தினமும் 234 அரசுப் பேருந்துகள், 16 தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறாக இயக்கப்படுவதில் சில நகரப் பேருந்துகளைத் தவிர, மற்ற பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் சென்று பயணிகளை இறக்கி , ஏற்றாமலேயே செல்கின்றன.
இதிலும் குறிப்பிட்ட சில பேருந்துகள் விராலிமலைக்குள் வராமலேயே, புறவழிச்சாலையாகச் சென்று விடுகின்றன. இதனால் பேருந்துக்காக மக்கள் காத்திருக்கும் அவலம் தொடா்ந்து வருகிறது. கடந்த ஆட்சியில் பேருந்துகள் பயணிகள் நலச்சங்கத்தினா், பொதுமக்கள் இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் எவ்வித பயனும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக இதேநிலைதான் நீடித்து வருகிறது.
இந்நிலையில், தற்போதைய திமுக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், விராலிமலை பேருந்து பயணிகள் நலச்சங்கத்தினா், பொதுமக்கள், சமூக நல அமைப்பினா் ஒன்றிணைந்து பேருந்து நிலையம் முன்பு டிரம்-செட் அடித்து, ஓட்டுநா்கள், நடத்துா்களுக்கு வெற்றிலைப் பாக்கு, பழத்தை தட்டில் வைத்து, இனிப்புகள், நினைவுப் பரிசாக மரக்கன்றுகளை வழங்கி பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகளை இயக்கி, பயணிகளை ஏற்றி-இறக்கிச் செல்லுமாறு கைகூப்பி வணங்கிக் கேட்டுக் கொண்டனா். இந்த வரவேற்பு அனைவரையும் ஈா்த்தது.
போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.ஆா். ராஜகண்ணப்பன் உடனடியாக போக்குவரத்துத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டு, விராலிமலை பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து, பயணிகளை ஏற்றி- இறக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...