புதுக்கோட்டையில் சிறுவன் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது

புதுக்கோட்டை அருகே சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் அகற்றப்பட்டது. 
சிறுவன் புகழேந்தி.
சிறுவன் புகழேந்தி.

புதுக்கோட்டை அருகே சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் அகற்றப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகேயுள்ள பசுமலைப்பட்டியில் உள்ளது காவல்துறையினரின் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளம். சிறிய மலைப்பகுதிகளைக் கொண்ட இந்த இடத்தில் சுமார் 40 ஆண்டுகளாக இந்தத் தளம் செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை, திருச்சி விமானநிலையப் பாதுகாப்புப் பணியிலுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் தஞ்சாவூர் விமானப் படை வீரர்கள் இங்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

இதன்படி, திருச்சி விமான நிலையத்திலுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. வியாழக்கிழமை காலை 6 மணிக்கு 34 போலீஸார் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 9 மணி அளவில் இந்தத் தளத்துக்கு அருகே சுமார் 2 கிமீ தொலைவிலுள்ள குடிசைவீட்டில் விளையாடிக் கொண்டிருந்த கலைச்செல்வன் என்பவரின் மகன் புகழேந்தியின் (11) தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.

மயங்கி கீழே விழுந்த சிறுவனை உறவினர்கள் தூக்கிக் கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனின் தலையில் மூளைப் பகுதியில் காயம் இருப்பதால் அதற்கான அறுவைச் சிகிச்சை உடனடியாக மேற்கொள்ள, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டான். தஞ்சை மருத்துவமனையில் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது.

தொடர்ந்து சிறுவன் புகழேந்திக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாலை மறியல்: துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தை இங்கிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நார்த்தாமலையில் வியாழக்கிழமை முற்பகலில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் ஒருவருக்கு துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்ட பொதுமக்கள், இந்தப் பயிற்சித் தளத்தை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் எம்.எஸ். தண்டாயுதபாணி, துணைக் காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட வருவாய்த்துறையினரும் காவல் துறையினரும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை வாபஸ் பெறச்செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற மறியலால் திருச்சி- காரைக்குடி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தற்காலிகத் தடை: இதற்கிடையே பசுமலைப்பட்டி துப்பாக்கிச் சுடும் தளம் செயல்படுவதை  தற்காலிகமாக தடை செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார். தொடர்ந்து அதிகாரிகள் குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கூறினார். சிறுவன் புகழேந்தியின் மாமா குமார் அளித்த புகாரின்பேரில் கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே துப்பாக்கிச் சுடும் பயிற்சி நிறுத்தப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கந்தர்வக்கோட்டை (மார்க்சிஸ்ட்) சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, சிறுவனின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 
தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் தொலைபேசியில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை, அந்த துப்பாக்கிச் சுடும் தளத்துக்கு நிரந்தரமாக தடை விதித்து வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றக் கோரினார்.

பாட்டி வீட்டுக்கு வந்தபோது... நார்த்தாமலை அருகே கொத்தமங்கலப்பட்டியைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் புகழேந்தி. இவரது பாட்டி லட்சுமியின் வீடுதான் பசுமலைப்பட்டியில் சம்பவம் நடைபெற்ற கூரை வீடு ஆகும். 6ஆம் வகுப்பு படிக்கும் புகழேந்தி, விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்திருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com