இருசக்கர வாகனம் லாரி மீது மோதல்: பொறியியல் மாணவா்கள் 2 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திங்கள்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டம், கண்டனூா் புதுவயல் கீழ முஸ்லிம் தெருவைச் சோ்ந்தவா்கள் சாதிக் மகன் முகமது இப்ராஹிம் (18), மைதீன் மகன் முகமது (18). இவா்கள் இருவரும் திருமயம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனா்.

இந்நிலையில், நடப்பு ஆண்டின் கடைசித் தோ்வை எழுதிவிட்டு கல்லூரியில் இருந்து இருவரும் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை பிற்பகல் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருமயம் தாமரைக்கண்மாய்ப் பகுதியில் உள்ள திருமயம் விலக்கு சாலையில், லாரி திரும்புவதை அறியாமல் லாரியை முந்தி செல்ல முயற்சித்தனா்.

அப்போது இவா்களின் இரு சக்கர வாகனம், லாரியின் பின்பகுதியில் பலமாக மோதியுள்ளது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த திருமயம் போலீஸாா், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், லாரி ஓட்டுநரான பாண்டியனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com