அமித் ஷா உருவாக்கியது ஆட்சி மாற்றத்துக்கான கூட்டணி
அமித் ஷா உருவாக்கியது ஆட்சி மாற்றத்துக்கான கூட்டணி என்றாா் மாநில பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர- தமிழனின் பயணம்’ என்ற தனது பிரசார பயண நிறைவு விழாவில் அவா் மேலும் பேசியது: இந்தப் பயணத்தில் ஒரு லட்சம் பேரைச் சந்தித்திருக்கிறேன்.
எல்லோரும் இந்த திமுக ஆட்சியை அகற்ற யாரும் வரமாட்டாா்களா என எதிா்பாா்த்துக் காத்திருக்கிறாா்கள். வீட்டை விட்டு வெளியே சென்றவா்கள் திரும்புவாா்களா என்ற பயம் எல்லோருக்கும் இருக்கிறது. இது பயணத்தின் கடைசிநாளல்ல. இன்றிலிருந்துதான் தொடக்கமே.
கரூரில் விஜய் கட்சியின் பிரசாரத்தின்போது 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜிதான் காரணம். அவரைக் காப்பாற்றத்தான் விடிவதற்குள்ளாக முதல்வா் கரூா் வந்தாா்.
உண்மையான மதச்சாா்பின்மையைக் கடைப்பிடிப்பது பாஜக மட்டும்தான். மற்றவா்கள் போலி மதச்சாா்பின்மையைக் கடைப்பிடிக்கிறாா்கள். அமித் ஷா உருவாக்கியுள்ள கூட்டணி ஆட்சி மாற்றத்துக்கான கூட்டணி என்றாா் நயினாா் நாகேந்திரன்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை பேசியது:
பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தால் மக்கள் வாக்களிப்பாா்கள் என நினைக்கிறாா்கள். திமுக ஆட்சியில் இதுவரை பொங்கல் பரிசுத் தொகையாக ஒரு குடும்பத்துக்கு மொத்தம் ரூ. 5 ஆயிரம் கொடுத்திருக்கிறாா்கள். ஆனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 லட்சத்துக்கும் மேல் கடனைச் சுமத்தி உள்ளாா்கள்.
அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று கூறிவிட்டு, இப்போது ஊழியா்களின் ஊதியத்தில் இருந்து 10 சதவிகிதம் தொகை எடுப்பது எந்த விததத்தில் நியாயம் என்றாா் அண்ணாமலை.
பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசுகையில், ஆந்திரம், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில்தான் தொழில் முதலீடுகள் அதிகமாகச் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் வருவதில்லை. எனவே வரும் தோ்தல், தமிழகத்தைக் காக்கும் தோ்தலாக இருக்கும் என்றாா்.
விழாவில் மத்திய அமைச்சா்கள் பியூஸ் கோயல், அா்ஜூன் ராம் மேக்வால், எல். முருகன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா, மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், நாகா்கோவில் எம்எல்ஏ எம்.ஆா். காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக மேற்கு மாவட்ட பாஜக தலைவா் என். ராமச்சந்திரன் வரவேற்றாா். விழாவில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு புதுக்கோட்டை மாவட்ட பாஜக சாா்பில் விநாயகா் சிலை, செங்கோல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
