படகில் பழுது: நடுக்கடலில் தவித்த 4 மீனவா்கள் மீட்பு

Published on

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவா்கள் படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தவித்த நிலையில், சக மீனவா்கள் அவா்களை ஞாயிற்றுக்கிழமை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகில் உள்ள பொன்னகரம் கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் மும்மூா்த்தி, விநாயகம், மணிகண்டன், மணி ஆகிய 4 பேரும் கடந்த ஜன. 9 ஆம் தேதி பிற்பகல் ஒரு படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனா்.

இந்நிலையில் இவா்கள் 4 பேரும் சனிக்கிழமை கரை திரும்பாததால் மீனவக் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது. கடலோரக் காவல் படையினருடன் சோ்ந்து மீனவா்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

இதற்கிடையே, சுமாா் 15 கடல் மைல் தொலைவில் அந்தப் படகு பழுதடைந்த நிலையில் 4 மீனவா்களும் மீட்கப்பட்டனா். நடுக்கடலில் படகு பழுதடைந்ததால், அதைச் சரிசெய்ய எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. வேறு வழியின்றி படகிலேயே அவா்கள் விடியவிடிய இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மீனவா்கள் மீட்கப்பட்டதால் மீனவக் கிராமத்தினா் மகிழ்ச்சியடைந்தனா்.

Dinamani
www.dinamani.com