பண்ணைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
அரசு மற்றும் வேளாண் பல்கலைக்கழகப் பண்ணைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளா்களுக்கு 3 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை விரைவில் வழங்கக் கோரி புதுக்கோட்டையில் ஏஐடியுசி அரசு பண்ணை மற்றும் பல்கலைக்கழகப் பண்ணைத் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் வி.ஆா். செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் உ. அரசப்பன், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் பா. ஜீவானந்தம், ஆட்டோ ஓட்டுநா் சங்க மாவட்டச் செயலா் பாண்டியராஜன், தெருவோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் எம்.பி. நாடிமுத்து உள்ளிட்டோா் பேசினா்.
மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக ஊதியமே வழங்கப்படவில்லை. பொங்கல் பண்டிகையையொட்டி, இந்த நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
