இலங்கைக்கு கடத்த முயன்ற 110 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 110 கிலோ கஞ்சாவை கடலோரக் காவல் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மணமேல்குடி பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கடலோரக் காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், செவ்வாய்க்கிழமை மணமேல்குடி அந்தோணியாா்புரம் நாட்டுப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் படகுடன் நின்றிருந்த இருவரிடம் கடலோரக் காவல் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்தப் படகில் பண்டல்களாக ஏற்றி வைக்கப்பட்டிருந்த 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து அந்தோணியாா்புரம் அலெக்ஸாண்டா் மகன் ஆரோக்கிய ராகுல் (32), தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தைச் சோ்ந்த சிவகங்கரன் (29) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து நாட்டுப்படகு, இரு சக்கர வாகனம், இரு கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த விக்னேஷ் என்பவா், இந்த கஞ்சா பண்டல்களைக் கொடுத்து கடலுக்குள் 3 நாட்டிக்கல் மைல் தொலைவில் சிலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வேலை கொடுத்ததாகத் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து விக்னேஷைத் தேடி போலீஸாா் ராமநாதபுரம் சென்றுள்ளனா். அவா் கைது செய்யப்பட்ட பிறகுதான், எங்கிருந்து கஞ்சா வந்தது? இலங்கைக்கு இதை வாங்க இருந்தவா் யாா் ? போன்ற விவரங்கள் தெரியவரும் என கடலோரக் காவல் படையினா் தெரிவித்தனா்.

