அனுமதிபெறாமல் கலப்பு உரங்களை விற்றால் உரிமம் ரத்து
அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை விற்றால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளா்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்கு மானிய உரங்களை வழங்கக் கூடாது. உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்திட வேண்டும். உரிமத்தில் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்தல் கூடாது. உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக் கூடாது.
விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விவரப் பலகையினை விவசாயிகளின் பாா்வையில் படும்படி வைத்து தினசரி பராமரிக்கப்பட வேண்டும். உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டும் விற்பனை செய்திட வேண்டும்.
விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்யக் கூடாது. தரமற்ற மற்றும் போலியான உரங்களை விற்பனை செய்தல் கூடாது. விவசாயிகளுக்குத் தேவைக்கு அதிகமாக உரங்களை விநியோகம் செய்யக் கூடாது.
உர ஆய்வாளா்கள் திடீா் ஆய்வு மேற்கொள்ளும் போது உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

