கோயில் வெள்ளிப் பொருள்கள் மாயமான வழக்கு: பந்தநல்லூர் கோயில் எழுத்தரிடம் ஐ.ஜி. விசாரணை

கும்பகோணத்தை அடுத்த திருமங்கைச்சேரி வரதராஜப் பெருமாள் கோயில் வெள்ளி பொருள்கள் மாயமான வழக்கில், போலீஸ் காவலில்
Updated on
1 min read

கும்பகோணத்தை அடுத்த திருமங்கைச்சேரி வரதராஜப் பெருமாள் கோயில் வெள்ளி பொருள்கள் மாயமான வழக்கில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட பந்தநல்லூர் கோயில் எழுத்தர்  ராஜாவிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சனிக்கிழமை விடிய விடிய விசாரணை நடத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே திருமங்கைச்சேரியில் வரதராஜப் பெருமாள் கோயில் சுவாமிக்கு அணிவிப்பதற்காக 1984 ஆம் ஆண்டு 53 வெள்ளி பொருள்கள், ஆபரணங்கள் தானமாக வழங்கப்பட்டன. இக்கோயிலில் போதிய பாதுகாப்பு இல்லாததால் வெள்ளிப் பொருள்களை பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். பின்னர்,  2007இல் வரதராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகத்தின்போது 53 வெள்ளி பொருள்களும் பந்தநல்லூர் கோயில் தலைமை எழுத்தராக இருந்த ராஜாவிடம் இருந்து பெறப்பட்டு பெருமாளுக்கு அணிவித்தனர்.
அதன் பிறகு மீண்டும் வெள்ளி பொருள்களை கோயில் நிர்வாகம் திரும்ப ஒப்படைத்துவிட்டது. இந்நிலையில் வரதராஜ பெருமாள் கோயில் வெள்ளி ஆபரணங்கள் தொடர்பாக உபயதாரர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின்பேரில், மேற்கண்ட ஆபரணங்களை சரிபார்க்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் வரதராஜ பெருமாள்,  பசுபதீஸ்வரர் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் ஆய்வு செய்தனர். இதில் அங்கிருந்த 53 வெள்ளி பொருள்களில் பாடகம்,  கண்டசரம்,  கொலுசு, வைரமுடி, கவசம், கிரீடம், ஒட்டியாணம், காது தோடு, பொட்டு உட்பட 37 வெள்ளி பொருள்களை காணவில்லை. 16 பொருள்கள் மட்டும் இருந்தது. இதுகுறித்து,  ஏற்கெனவே கோயில் சிலை மாயமான வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருக்கும் ராஜா மீது, வெள்ளி பொருள்கள் மாயமானது தொடர்பாக கடந்த ஜனவரி 25 ஆம் தேதி மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறையில் இருக்கும் ராஜாவை கடந்த 2-ஆம் தேதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்,  காவலில் எடுத்தனர். இந்நிலையில்,  ராஜாவிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் நேரடியாக சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய  விசாரணை நடத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com