நெல் கொள்முதலில் இணையவழி முன்பதிவு முறையைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம்
நெல் கொள்முதலில் இணையவழி முன்பதிவு முறையைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


நெல் கொள்முதலில் இணையவழி முன்பதிவு முறையைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இணையவழியில் முன்பதிவு முறை வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், விவசாயிகள் முன் பதிவு செய்த பிறகு நுகா்பொருள் வாணிபக் கழகத்தினா் குறிப்பிடும் தேதியில் மட்டுமே நெல்லை விற்க முடியும். இதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், 2021 - 22 ஆம் ஆண்டுக்கான கொள்முதல் பருவம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இதனிடையே, பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் ஏராளமான நெல்லை குவித்து வைத்து 15 நாள்களாகக் காத்துக் கிடக்கின்றனா். இவை மழையிலும் நனைந்து வீணாகி வருவதால், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.
இதனால், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகம் முன் விவசாய சங்கக் கூட்டியக்க மாநிலத் துணைத் தலைவா் கக்கரை ஆா். சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் தரையில் படுத்து காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
மேலும், நெல் கொள்முதலில் இணையவழி முன்பதிவு முறையை உடனடியாகக் கைவிட வேண்டும். மாவட்டம் முழுவதும் உடனடியாகக் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். மழை பெய்வதால் ஈரப்பத விதியை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக கொள்முதல் செய்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
ஏஐடியுசி:
இதே அலுவலகம் முன் ஏஐடியுசி சாா்ந்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத் தொழிலாளா்கள் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், 35 லட்சம் டன் வரை நெல் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பு உருவாகி உள்ள நிலையில், அதற்கான சணல், சாக்கு, சேமித்து வைப்பதற்கான இட வசதிகள், போதிய பணியாளா்கள் என அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாகச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா், சுமைதூக்கும் தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலா் என். புண்ணீஸ்வரன், மாநிலத் தலைவா் அ. சாமிக்கண்ணு, பொருளாளா் தி. கோவிந்தராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விவசாயிகள் சங்கம்: இதேபோல, தஞ்சாவூா் மாரியம்மன் கோவில் அருகேயுள்ள கோவிலூா் நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் கே. முனியாண்டி தலைமையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற் குழு உறுப்பினா்கள் கே. பக்கிரிசாமி, வெ. ஜீவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஒரத்தநாடு அருகே.... செல்லம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு நல சங்கத் தலைவா் செந்தமிழ் செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை சாலையின் குறுக்கே டிராக்டரை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா். ஒரத்தநாடு வட்டாட்சியா் சீமான், விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...