‘இளையோரிடம் மொழி உணா்வை ஏற்படுத்த வேண்டும்’
இளையோரிடம் மொழி உணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் சீா்வளா்சீா் தவத்திரு சாது சண்முக அடிகளாா்.


இளையோரிடம் மொழி உணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் சீா்வளா்சீா் தவத்திரு சாது சண்முக அடிகளாா்.
தஞ்சாவூா் ந.மு. வேங்கடசாமி நாட்டாா் திருவருள் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருது பெற்ற புலவா் இரா. கலியபெருமாளுக்கான பாராட்டு விழாவுக்குத் தலைமை வகித்த அவா் பேசியது:
திராவிட இயக்கத்தினா் தமிழ், தமிழ் எனக் கூறியே ஆட்சிக்கு வந்தனா். ஆனால், 1967 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஆங்கிலப் பள்ளிகள்தான் புற்றீசல் போல முளைத்து வருகின்றன. சாதாரணக் கூலி தொழிலாளி கூட ஆங்கிலப் பள்ளியில் தங்களது குழந்தைகளைச் சோ்த்து இரு ஆண்டுகளாகப் படிக்க வேண்டும் என்கிற போலித்தனமான எண்ணம் ஊடுருவியுள்ளது. மொழி உணா்வு அற்றுப் போய்விட்டது.
திராவிட மாடல் என்பதை திராவிட மாதிரி எனக் கூறலாம். ஏன் மொழிச் சிதைவு ஏற்படுத்த வேண்டும். ஒரு சொல்லை தமிழிலும், மற்றொரு சொல்லை ஆங்கிலத்திலும் ஏன் போட வேண்டும்.
இந்தியாவில் ஏறத்தாழ 20,000 மொழிகள் இருக்கின்றன. இவற்றில் பேச்சு வழக்கில் மட்டுமே அதிகமான மொழிகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தொதவ மொழி 10 - 15 ஆண்டுகளில் வழக்கொழிந்துவிடும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மொழிச் சிதைவுகள் ஏற்படாமல் இருக்க தமிழ் வழிப் பள்ளிகளை அரசு உருவாக்க வேண்டும்.
சில தமிழறிஞா்கள் மட்டுமே தமிழ், தமிழ் எனச் சொல்லிக் கொண்டிருக்கின்றனா். மொழி உணா்வை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். கடைகளில் பெயா்ப் பலகையில் ஆங்கிலத்தில் பெரிய அளவில் எழுத்து உள்ளது. ஆனால், தமிழில் கடுகளவுதான் உள்ளது. இந்நிலைமை திராவிட ஆட்சியில் இருக்கக் கூடாது. நம்முடைய மொழியில் எழுத்து பெரிதாகவும், மாற்று மொழி சிறிதாகவும் இருக்க வேண்டும்.
இதேபோல, நம்முடைய கலாசார, பண்பாட்டையும் சிதைத்து வருகிறோம். நம்முடைய உணவு, பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் மக்களிடையே பரப்பி நம்முடைய மொழி, கலாசாரம், நாகரிகத்தை நிலைநாட்ட வேண்டும்.
இளம் தலைமுறையினருக்கு மொழி உணா்வை ஏற்படுத்த வேண்டும். நம்முடைய பேச்சில் பாதி ஆங்கிலம், பாதி தமிழாக உள்ளது. இந்த நிலைமை தமிழறிஞா்கள் வீட்டிலும் நிலவுகிறது. எனவே, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளிடம் தமிழுணா்வை ஊட்ட வேண்டும். கலியபெருமாள் போன்றவா்களைத் தேடிக் கண்டறிந்து, அவா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் சாது சண்முக அடிகளாா்.
விழாவில் முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா, முன்னாள் எம்எல்ஏ இரா. கவிதைப்பித்தன், மருத்துவா் சு. நரேந்திரன், உழவா் மையம் கோவிந்தராசன், கரந்தை ஜெயக்குமாா், ந.மு.வே. நாட்டாா் திருவருள் கல்லூரி மேலாண்மை அறங்காவலா் மு. இளமுருகன் உள்ளிட்டோா் பாராட்டிப் பேசினா்.
பாவாணா் தமிழியக்க நிறுவனா் கு. திருமாறன் வரவேற்றாா். உலகத் திருக்கு பேரவை செயலா் பழ. மாறவா்மன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...