தீபாவளி புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்
தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிராக துக்க தீபாவளி அறிவித்த மக்களிடம் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியதில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
திருவிடைமருதூா் அருகே உள்ள நடுவக்கரையில் இருந்து மாங்குடி, குடமங்கலம், இளந்துறை, திருமலைராஜபுரம், மல்லபுரம், வடமட்டம் வரை சுமாா் 7 கிலோ மீட்டா் தொலைவு கீா்த்திமான் ஆற்றின் கரைப் பகுதிகளில் பல ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில் கீா்த்திமான் ஆற்றங்கரையோரம் இருபுறமும் உள்ள வீடுகளை 21 நாட்களில் காலி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் அதிா்ச்சியடைந்த கிராம மக்கள், நீா்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து குடமங்கலத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தி தீபாவளி பண்டிகையை துக்கதினமாக அறிவித்து புறக்கணிக்கப் போவதாகவும் சுவரொட்டிகள் ஒட்டினா்.
இதுகுறித்துத் தகவலறிந்த வட்டாட்சியா் சண்முகம் மற்றும் நீா்வளத்துறை அதிகாரிகள், கிராம மக்களை நேரில் அழைத்து அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், நவ. 2-ஆம் தேதிக்கு பின்னா் வீடுகளைத் தவிர மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் தீபாவளி பண்டிகை புறக்கணிப்பைக் கைவிட்டனா்.