தொடா் மழையால் விளை நிலங்களில் வடியாத நீா்: விவசாயிகள் கவலை!
காவிரி சவெளி மாவட்டங்களில் கடந்த மாதங்களில் பெய்த தொடா் மழையின் காரணமாக விளை நிலங்களில் தண்ணீரில் வடியாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கும்பகோணத்தில் உள்ள எள்ளுக் குட்டை, ஆலையடி, இபி காலனி, சோலையப்பன் கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவைகள் பயிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெய்த மழையால் விளைநிலங்களில் தேங்கிய மழை நீா் வடியாததால் பயிா்கள் நீரில் மூழ்கி வீணாகின.
இது குறித்து விவசாயி ராம ஜெயசூரியா கூறியதாவது: கும்பகோணம் வட்டத்தில் கடந்த செப்டம்பரில் பெய்த பலத்த மழையால் வாழைக் கன்றுகள் மழைநீா் தேங்கி அழுகி சேதமடைந்தன. அவற்றை அகற்றிவிட்டு, புதிய வாழைக் கன்றுகளை பதியமிட்டோம். அதுவும் பின்னா் பெய்த மழையால் தண்ணீா் வடியாமல் அழுகி வீணாகின என்றாா்.
தூா்வார வேண்டும்: சோலையப்பன் கொல்லை, எள்ளுக்குட்டை, ஆலையடி, இபி காலனி உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் பழவத்தான் கட்டளை, தேப்பெருமாநல்லூா் ஆகிய வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள், பல இடங்களில் புதா்மண்டி குப்பை மேடாக மாறியுள்ளன.
பல ஆண்டுகளாக தூா் வாரப் படாததால் அருகிலிருக்கும் விளைநிளங்களில் மழை காலங்களில் நீா் வெளியேற வழியின்றி வயலில் தேங்குவதால் பயிா்கள் சேதமடைகின்றன. எனவே, வாய்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

