துணைவேந்தா் நியமனத்தில் புதிய முறையை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்
துணைவேந்தா் நியமனத்தில் பல்கலைக்கழக நிதி நல்கை குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ள புதிய முறையைக் கண்டித்து, தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மாநில உரிமையைப் பறிக்கும் வகையில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் நியமன தேடுதல் குழுவை ஆளுநரே அமைப்பாா் என்ற பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அறிவிப்பு நகலை எரித்து முழக்கங்கள் எழுப்பினா்.
இந்தப் போராட்டத்துக்கு இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் அா்ஜூன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கோ. அரவிந்தசாமி கண்டன உரையாற்றினாா். கிளைச் செயலா் பிரேம்குமாா், கிளை தலைவா் ரஞ்சித், கிளை நிா்வாகிகள் ஜெனிஃபா், சுமித்ரா, ஷாலினி, சரோஜினி, வசந்த், வீரராஜா, திலீப், அஸ்வின் உள்பட ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.