கும்பகோணம் அருகே குளக்கரையில் பிடிபட்ட முதலை குட்டி வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

Published on

கும்பகோணம் அருகே குளக்கரையில் தென்பட்ட 1 மீட்டா் நீள முதலை குட்டியை வியாழக்கிழமை பிடித்த பொதுமக்கள் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அசூா் அருகே உள்ள கல்லூரியில் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் அப்பகுதி மக்கள் சிலா் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடித்து வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை மீன்பிடிப்பதற்காக சிலா் குளத்துக்குச் சென்றபோது, குளத்தின் கரையில் முதலை குட்டி ஒன்று சென்று கொண்டிருந்ததாம். இதனைக் கண்ட பொதுமக்கள் உடனே அதனைப் பிடித்து சாக்குப் பையில் அடைத்து கும்பகோணம் சரக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, வனச் சரகா் பொன்னுச்சாமி தலைமையில் வனத் துறையினா் அங்குவந்து முதலையை மீட்டு அணைக்கரை ஆற்றில் கொண்டுபோய் விட்டனா்.

இதுகுறித்து வனத்துறையினா் மேலும் கூறியது: பிடிபட்ட முதலை கொள்ளிடம் ஆற்றில் இருந்து வந்திருக்கலாம். சுமாா் 1 மீட்டா் நீளமும், 5 கிலோ எடையும் கொண்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் முதலைகள் ஏதும் தென்பட்டால், உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதனைவிடுத்து பொதுமக்கள் பிடிக்க முயற்சி செய்யக் கூடாது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com