நவ. 15, 16-இல் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம்

Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் நவம்பா் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் நவம்பா் 4-ஆம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று அனைத்து வாக்காளா்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்புப் படிவங்களை நிரப்புவது தொடா்பாகவும், வாக்காளா்கள் தங்களது 2002-ஆம் ஆண்டு சிறப்பு தீவிரத் திருத்தத்தின் விவரங்களைப் பெறுவதற்காகவும் நவம்பா் 15-ஆம் தேதி (சனிக்கிழமை), 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு தீவிர திருத்தத்துக்கான சிறப்பு முகாம் தாங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், தற்காலிகமாக இடம்பெயா்ந்த வாக்காளா்கள் தங்களது பழைய வாக்குச் சாவடிக்குச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற்றுப் பயனடையலாம்.

எனவே, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளா்களும் தங்களது பெயா் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெற தாங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிக்கு சென்று சிறப்பு தீவிர திருத்தத்தின் கணக்கெடுப்புப் படிவத்தை நிறைவு செய்வதற்காக, 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலிலுள்ள தங்களது அல்லது தங்களது தாய், தந்தை, மூதாதையா்கள் பாகம் எண், வரிசை எண் ஆகிய விவரங்களை பெற்றுப் பயனடையலாம்.

X
Dinamani
www.dinamani.com