உரிமம் இல்லாத 31 ஆயிரம் கிலோ உரங்கள் பறிமுதல்: வேளாண் துறையினா் விசாரணை
தஞ்சாவூரில் உரிமம் இல்லாத 31 ஆயிரம் கிலோ உர மூட்டைகளை வேளாண் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் அருகே புதுப்பட்டினம் பகுதியிலுள்ள கிடங்கில் வேளாண் துறை உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) செ. செல்வராசு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது, 5 கிலோ, 25 கிலோ, 50 கிலோ எடை கொண்ட சாக்குகளில் 30 ஆயிரத்து 970 கிலோ குருணை வடிவிலான உரமும், அரை லிட்டா், ஒரு லிட்டா் பாட்டில்களில் திரவ வடிவில் 550 லிட்டா் உரமும் இருந்தன.
உற்பத்தி விவரம் குஜராத் மாநில முகவரியுடனும், விற்பனை விவரங்கள் திருவாரூா் மாவட்ட முகவரியுடனும் இருந்த இந்த உர மூட்டைகளுக்கு விற்பனை உரிமம் பெறப்படவில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து வட்டார வேளாண் உதவி இயக்குநா் இந்திரஜித், உர ஆய்வாளா் தினேஷ்வரன், புதுப்பட்டினம் விஏஓ சங்கா்லால், தாலுகா காவல் நிலையத்தினா் முன்னிலையில் ரூ. 62.25 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகளையும், திரவ உர பாட்டில்களையும் உதவி இயக்குநா் செல்வராசு பறிமுதல் செய்து, சீல் வைத்தாா்.
இதுகுறித்து செல்வராசு கூறுகையில், இயற்கை உரம் என்ற பெயரில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இந்த உரங்கள் உண்மையானவையா அல்லது போலியா என்பதை அறிவதற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளன. இதுபோன்ற உரிமம் இல்லாத மற்றும் போலியான உரங்கள் கண்டறியப்பட்டால், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

