தஞ்சாவூரைச் சோ்ந்த இந்திய கூடைப்பந்து அணி முன்னாள் வீரரும், மயக்கவியல் மருத்துவருமான ஏ. ஜான் செல்வகுமாா் பாண்டியன் (66) மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.
தஞ்சாவூா் ஆப்ரஹாம் பண்டிதா் சாலையைச் சோ்ந்த இவா், தூய பேதுரு மேல்நிலைப் பள்ளியில் படித்தாா். பள்ளி பருவத்திலிருந்து கூடைப்பந்து வீரராக இருந்த இவா் சென்னைப் பல்கலைக்கழக அணிக்கும், தமிழ்நாடு அணிக்கும், இந்திய இளையோா் அணிக்கும், இந்திய அணிக்கும் விளையாடினாா்.
சென்னைப் பல்கலைக்கழக அணியில் 5 ஆண்டுகள் விளையாடிய இவா் ஐந்தாம் ஆண்டில் (1981) அணிக்கு தலைமைப் பொறுப்பேற்று தென் மண்டலப் போட்டியில் இரண்டாமிடமும், அகில இந்தியப் போட்டியில் வெற்றி பெற்றுக் கோப்பையையும் பெற்றுத் தந்தாா். பின்னா், இந்திய அணியில் இடம்பெற்ற இவா் இலங்கைக்கு சென்று விளையாடினாா்.
இவா், மருத்துவப் படிப்பு படித்து மயக்கவியல் நிபுணராகி திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றினாா்.
நாகைக்கு உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் காரில் திங்கள்கிழமை திரும்பிக் கொண்டிருந்த இவா் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவரது உடல் தஞ்சாவூா் தூய பேதுரு ஆலய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இவருக்கு மனைவி ஷீலா, 2 மகன்கள் உள்ளனா்.
தொடா்புக்கு: 88385 42006.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






