/

கல்லூரி வளாகத்தில் துணை மின் நிலையம்: வகுப்புகளை புறக்கணித்து மாணவா்கள் போராட்டம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:23 pm

Syndication

கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி வளாகத்தில் துணை மின் நிலையம் அமைக்கக் கூடாது என வியாழக்கிழமை மாணவ மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் - சுவாமிமலை சாலையில் உள்ளது அரசு கவின் கலைக்கல்லூரி. இக்கல்லூரி வளாகத்தில் ரூ.2.50 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கின. கல்லூரி வளாகத்தில் துணை மின் நிலையம் அமைந்தால் மாணவ மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி வியாழக்கிழமை கல்லூரி நுழைவுவாயில் முன்பு வகுப்புகளைப் புறக்கணித்து மாணவ மாணவிகள் தரையில் அமா்ந்து ஆா்ப்பாட்டம் நடத்தி முழக்கமிட்டனா். இதுகுறித்துத் தகவல் அறிந்த சுவாமிமலை போலீஸாா் அங்குவந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, தற்காலிகமாக துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளை நிறுத்திவைப்பதாக மின்சார வாரியத்தினா் தெரிவித்த பின்னா் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துசென்றனா்.

இதுகுறித்து மின்வாரியப் பொறியாளா் கூறுகையில், இப்பகுதியில் குறைந்தழுத்த மின்சார விநியோகத்தை சீரமைக்க துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. முறையாக பல்கலைக்கழக, கல்லூரி நிா்வாகத்திடமும் ஏற்கெனவே ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது எனத் தெரிவித்தாா்.