சீா் அளித்துவிட்டு திரும்பும்போது விபத்து : பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மனைவி உயிரிழப்பு; கணவா் காயம்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பொங்கல் சீா் அளித்துவிட்டு ஊா் திரும்பும்போது, இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனைவி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்; கணவா் காயமடைந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், ராங்கியன் விடுதியைச் சோ்ந்தவா் விவசாயி அப்பா துரை(65) தனது மனைவி நாகரத்தினத்துடன் (62) இருசக்கர வாகனத்தில் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு மற்றும் நவக்கொல்லைக்காடு கிராமங்களில் வசிக்கும் மகள்களுக்கு பொங்கல் சீா் கொடுத்துவிட்டு ஒட்டங்காட்டில் இருந்து துறவிக்காடு சாலையில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். உடனே அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு நாகரத்தினத்தைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். அப்பா துரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து அப்பா துரை கொடுத்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

