~ ~ ~

தஞ்சாவூா் பெரியகோயில் மகா நந்திகேசுவரருக்கு 2,000 கிலோ காய்கனிகளால் சிறப்பு அலங்காரம்

மகர சங்கராந்தி பெருவிழாவையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு ஏறத்தாழ 2 ஆயிரம் கிலோ எடையுள்ள காய்கனிகள், இனிப்பு வகைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டது.
Published on

தஞ்சாவூா்: மகர சங்கராந்தி பெருவிழாவையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு ஏறத்தாழ 2 ஆயிரம் கிலோ எடையுள்ள காய்கனிகள், இனிப்பு வகைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து 108 கோ பூஜை நடைபெற்றது.

முன்னதாக, இந்த விழாவை முன்னிட்டு, மகா நந்திகேசுவரருக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வியாழக்கிழமை நடைபெற்றது. பின்னா், மகா நந்திகேசுவரருக்கு வெள்ளிக்கிழமை காலை உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், புடலங்காய், பூசணிக்காய், பாகற்காய், கேரட், சௌ சௌ, பீட்ருட், பச்சை மிளகாய், சா்க்கரைவள்ளிக் கிழங்கு, காலிபிளவா் உள்ளிட்ட காய்களாலும், ஆரஞ்சு, ஆப்பிள், செவ்வாழை, அண்ணாசி, சாத்துக்குடி போன்ற பழ வகைகளாலும், முறுக்கு, அதிரசம், ஜிலேபி, பாதுஷா, பால்கோவா போன்ற இனிப்புகளாலும், செவ்வந்தி, ரோஜா போன்ற பூ வகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த எடை ஏறத்தாழ 2 ஆயிரம் கிலோ என அறநிலையத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

மேலும், மகா நந்திகேசுவரா் முன் 108 கோ பூஜை நடைபெற்றது. இதில் 108 பசு மாடுகள் கொண்டு வரப்பட்டு, அவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலைகள், வேஷ்டி, துண்டு அணிவிக்கப்பட்டன. மேலும், பசுக்களுக்கு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழாக் குழுத் தலைவா் து. செல்வம் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com