தரமில்லாத உளுந்து விதைகளை விற்போா் மீது சட்ட நடவடிக்கை!
தஞ்சாவூா் மாவட்டத்தில் தரமில்லாத உளுந்து விதைகள் விற்போா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் வெ. சுஜாதா எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: உளுந்து விதை உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சான்று அட்டை பொருத்தப்பட்ட தரமான உளுந்து விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்க வேண்டும். விவசாயிகளுக்கு தரமான உளுந்து விதைகள் விற்பனையின்போது, விதைச்சட்ட விதிகள்படி, கொள்முதல் பட்டியலில் விதை விற்பனை உரிமம் எண், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், உற்பத்தியாளா் விவரம் உட்பட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். சான்று அட்டை குறிப்பாக ஆதார நிலை மற்றும் சான்று நிலை விதைகளையே விற்க வேண்டும்.
விதை விற்பனையாளா்கள் தரமான உளுந்து விதைகளின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், குவியல் வாரியாக விதை மாதிரி பரிசோதனை செய்த முளைப்பு அறிக்கை, பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை கண்டிப்பாக விற்பனை நிலையங்களில் வைத்திருக்க வேண்டும்.
தரப் பரிசோதனை அறிக்கை, பதிவுச் சான்றிதழ் இல்லாத உளுந்து விதைகளை விற்பனை செய்யும் விற்பனையாளா்கள், தொடா்புடைய நிறுவனத்தின் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதை விதிகள் 1968-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளுக்கு சான்று பெற்ற உளுந்து விதைகளான வம்பன் 6, வம்பன் 8, வம்பன் 10, வம்பன் 11, ஏடிடீ 5, டீ 9 போன்ற விற்பனை செய்யும்போது, விற்பனை ரசீது கொடுக்க வேண்டும். அதில், விதையின் பெயா், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன், விவசாயி பெயா், முகவரி, விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும்.
