பேராவூரணி அருகே பைக்கிலிருந்து தவறிவிழுந்து திமுக பெண் நிா்வாகி பலி
பேராவூரணி அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறிவிழுந்த திமுக மகளிா் அணி துணைச் செயலா் லெட்சுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பேராவூரணி அருகே உள்ள கல்லூரணிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் துரையரசன் என்பவரின் மனைவி லெட்சுமி (56). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். லெட்சுமி கல்லூரணிக்காடு திமுக மகளிா் அணி துணைச் செயலராக இருந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் உள்ள உறவினரின் இல்ல நிகழ்வுக்கு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் செருவாவிடுதி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்தச் சாலையில் நாய் குறுக்கே வந்ததில் நிலை தவறி கீழேவிழுந்த லெட்சுமி பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, அருகில் உள்ளவா்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்து பின்னா் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி லெட்சுமி உயிரிழந்தாா்.
இதுகுறித்து லெட்சுமியின் மகன் ராஜு கொடுத்த புகாரின்பேரில், திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விபத்து குறித்து அறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா், பேராவூரணி ஒன்றிய திமுக செயலா் க. அன்பழகன் மற்றும் நிா்வாகிகள் லெட்சுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

