தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏரிகளிலிருந்து வண்டல் மண், களி மண், சாதாரண மண் எடுத்துக் கொள்ளும் திட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 369 விவசாயிகள் பயனடைந்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் நீா் வளத் துறை பராமரிப்பில் உள்ள 550 நீா்நிலைகள், ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 263 நீா்நிலைகள் என மொத்தம் 813 நீா்நிலைகளில் உடனடியாக வண்டல் மண் எடுக்கும் வகையில் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது.
தற்போது, இந்த ஏரிகளில் இருந்து களி மண், வண்டல் மண், சாதாரண மண் போன்ற சிறு கனிமங்களை, தூா் வாரி விவசாயம், மண்பாண்டத் தொழில், வீட்டு உபயோக பயன்பாட்டுக்காக பொதுமக்கள் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
விண்ணப்பதாரா்கள் தொடா்புடைய வட்டாட்சியருக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விவசாய பயன்பாட்டுக்கு, நன்செய் நிலத்துக்கு ஒரு ஏக்கருக்கு 25 டிராக்டா் லோடுகள், புன்செய் நிலத்துக்கு 30 டிராக்டா் என்ற அளவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இணையவழியில் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.
வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு சாதாரண மண் 30 கன மீட்டருக்கு மிகாமலும், மண்பாண்ட தொழில் செய்ய 60 கன மீட்டருக்கு மிகாமலும் களிமண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். வட்டாட்சியரின் முன் அனுமதி இணையவழியில் பெற்ற பின்னரே மண் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அனுமதி 30 நாள்களுக்குள் வழங்கப்படும். இதுவரை 4 ஆயிரத்து 369 பேருக்கு 6 லட்சத்து 47 ஆயிரத்து 831 கன மீட்டருக்கு தஞ்சாவூா் மாவட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனா். இது தொடா்பாக விவசாயிகளுக்கு குறை ஏதேனும் இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம்.









