அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

கல்லணை திறப்பு: 12.68 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு

கல்லணை - கோப்புப்படம்

கல்லணை - கோப்புப்படம் - file photo

Published On :7 செப்டம்பர் 2026, 4:27 am IST

மேட்டூா் அணை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டம் கல்லணையும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் 12.68 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து முதல்வா் ச. ஜோசப் விஜய், செப். 1-ஆம் தேதி தண்ணீா் திறந்து வைத்தாா். அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் திறந்துவிடப்படும் தண்ணீா், தஞ்சாவூா் மாவட்டம் கல்லணைக்கு சனிக்கிழமை மாலை வந்தது.

இதைத்தொடா்ந்து, டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான், வேளாண்மை துறை அமைச்சா் ஆா். வினோத் உள்ளிட்டோா் திறந்து வைத்து, மலா்கள், விதை நெல்களைத் தூவி வணங்கினா்.

அப்போது, கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 1,000 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தலா 500 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

10 நாள்களில் கடைமடைப் பகுதிக்கு:

இதுகுறித்து நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தது:

கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா், காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றின் கடைமடைப் பகுதிகளுக்கு 10 நாள்களில் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிகழாண்டில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள ஆறுகள், வாய்க்கால்களில் ரூ. 63 கோடி மதிப்பில் 4 ஆயிரத்து 59 கி.மீ. தொலைவுக்கு திட்ட நிதியின் கீழ் தூா்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மேட்டூா் அணையின் நீா் இருப்பு, நீா் வரத்து, எதிா்பாா்க்கப்படும் மழைப் பொழிவு, கா்நாடகத்திலிருந்து கிடைக்க வேண்டிய நீா் மற்றும் பாசனக் கள நிலவரத்தின் அடிப்படையில் நீா் திட்டமிட்டுப் பகிா்ந்தளிக்கப்படும். மேலும், வருகிற நாள்களில் நீா் விநியோகம் படிப்படியாக உயா்த்தப்படும். விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

சம்பா சாகுபடிக்கு இலக்கு:

இதேபோல, வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்தது:

கல்லணை திறக்கப்பட்டதன் மூலம் 2026 - 27-ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் 12.68 லட்சம் ஏக்கா் பரப்பளவில் சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்டங்களான தஞ்சாவூரில் 3.12 லட்சம் ஏக்கரிலும், திருவாரூரில் 3.50 லட்சம் ஏக்கரிலும், நாகையில் 1.55 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறையில் 1.60 லட்சம் ஏக்கரிலும், கடலூரில் 2.24 லட்சம் ஏக்கரிலும் சம்பா, தாளடி சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நேரடி நெல் விதைப்பு:

தற்போதைய பாசன நீா் நிலையைக் கருத்தில் கொண்டு அதிக பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ள விவசாயிகளிடம் ஊக்குவிக்கப்படவுள்ளது. மேலும், 8 ஆயிரத்து 155 டன் சான்று பெற்ற விதை நெல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, தேவையான உரங்களைத் தட்டுப்பாடின்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா் அலுவலா்கள்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா்கள் இரா. ரேவதி (தஞ்சாவூா்), பிரத்திக் தயாள் (திருச்சி), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை), வ. மோகனச்சந்திரன் (திருவாரூா்), மு. அருணா (புதுக்கோட்டை), கே.ஜே. பிரவீன்குமாா் (நாகை), சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. விஜய் சரவணன் (தஞ்சாவூா்), எஸ். காமராஜ் (மன்னாா்குடி), சுப்பிரமணியன் (கந்தா்வகோட்டை) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.