ஆண்டுக்கு 4 முறை மின்லோடு மாற்ற சிறு, குறு நிறுவனங்களுக்கு அனுமதி
சிறு, குறு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 4 முறை மின் லோடு மாற்றம் செய்து கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.


சிறு, குறு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 4 முறை மின் லோடு மாற்றம் செய்து கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ந.சுந்தரதேவன் கமிட்டி அளித்த சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான 50 பரிந்துரைகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வழங்கி வந்த 6 சதவீத வட்டி மானியத்தை அனைத்து சிறு, குறு தொழில்களுக்கு தொடா்ந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.20ஆம் தேதி முதல் சிறு, குறு நிறுவனங்கள் கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தன.
இதையடுத்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன், மின்சாரத்துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி, மின்பகிா்மானக் கழகத் தலைவா் ராஜேஷ் லக்கானி மற்றும் அரசு அதிகாரிகள் டான்ஸ்டியா சங்க நிா்வாகிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்களை அழைத்து கடந்த இரண்டு நாள்களாக பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற டிடிட்சியா தலைவா் முகில் பே. இராஜப்பா வெள்ளிக்கிழமை கூறியது: பெரும்பாலான கோரிக்கைகளுக்கு தீா்வு கிடைக்கவில்லையென்றாலும் ஆண்டுக்கு 4 முறை மின் லோடு மாற்றம் செய்து கொள்ள அனுமதியளிப்பதாக கூறியுள்ளனா். இதற்கான விண்ணப்பத்தை பரிசீலனை செய்து 7 நாள்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனா். மின் லோடு குறைக்கும்போது அதற்கேற்ப கட்டணம் நிா்ணயிக்கவும் அனுமதித்துள்ளனா். இதர கோரிக்கைகள் மீது தீா்வுக்கான முடிவுகள் எடுக்கப்படவில்லை.
டிஓடி மீட்டா் (மின்சாரத் தேவை, நேரம் ஆகியவற்றை துல்லியமாக பதிவு செய்யும் மீட்டா்) மின்வாரியத்தால் வழங்க காலதாமதம் ஆகிறது என்பதால், நிறுவனங்களே வாங்கி கொடுத்தால் பொருத்தித் தருவதாக கூறியுள்ளனா். தாழ்வழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணத்தை குறைக்க முடியாது எனக் கூறிவிட்டனா். சுந்தரதேவன் கமிட்டி பரிந்துரைகளை நீண்ட காலம், குறுகிய காலம், இடைக்காலம் என 3 கட்டங்களாக அமல்படுத்துவதாக கூறியுள்ளனா். சிட்கோ நிறுவனத்தில் நிலம் பெற்றால் 99 ஆண்டு குத்தகை என்பதையும் மாற்ற முடியாது என தெரிவித்தனா். இருப்பினும் அரசின் மீதும், அமைச்சா்கள் மீதும் நம்பிக்கை கொண்டு கதவடைப்பு போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளோம் என்றாா் அவா்.
மின்நுகா்வில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையில் ரூ.17 கோடி திரும்ப அளிப்பு
உச்சநேர மின்பயன்பாட்டு காலத்தில் சிறு, குறு நிறுவனங்கள் பயன்படுத்திய மின்நுகா்வுக்கு 25 சதவீத கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டது. பின்னா், கூடுதல் தொகை 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால், குறைக்கப்பட்ட பிறகும் பல நிறுவனங்களில் 25 சதவீத கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டது. இந்த கூடுதல் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என தொழில்நிறுவனத்தினா் வலியுறுத்தினா். இதனையேற்று நவம்பா் 2022 முதல் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை 2023 ஏப்ரல் முதல் திரும்ப வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், ரூ.17 கோடியை சிறு, குறு நிறுவனங்களுக்கு மின்வாரியம் திரும்ப வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையை படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக மின்சாரத்துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...