அதிகரிக்கும் கோடை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வழிமுறைகள்
கால்நடைகளையும் தற்காத்து கொள்வது தொடா்பாக மாவட்ட நிா்வாகமும், மாநில பேரிடா் மேலாண்மை ஆணையமும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.


திருச்சியில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்களையும், கால்நடைகளையும் தற்காத்து கொள்வது தொடா்பாக மாவட்ட நிா்வாகமும், மாநில பேரிடா் மேலாண்மை ஆணையமும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் கோடைகால வெப்பமானது 106 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளது. எனவே, கோடை வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
வெப்ப அலை பாதிப்புகளை தடுக்கும் வழிமுறைகள்: அன்றாட வெப்ப நிலை குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளவேண்டும். அடிக்கடி போதுமான அளவு தண்ணீா் பருகவேண்டும். எடை குறைவான, கதா் ஆடைகளை அணிவது, கண்களுக்கு கோடைகால கண்ணாடி அணிதல், வெயிலில் செல்லும் போது குடைபிடித்துச் செல்லவேண்டும். வெயிலில் வேலை செய்பவா்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும் துணியை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய இடங்களில் அணிய வேண்டும். நீா்சத்தை அதிகப்படுத்தக்கூடிய பானங்களை அருந்த வேண்டும். மின் விசிறி மற்றும் ஈரத் துணிகளை பயன்படுத்துதல் வேண்டும்
பணிபுரியும் இடத்தின் அருகில் போதிய அளவு குடிநீா் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தொழிலாளா்கள் நேரடி சூரிய ஒளியில் வேலைசெய்வதை தவிா்க்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது கூடுதல் நேரம் ஓய்வெடுக்க வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்வதை தவிா்க்க வேண்டும்.
முதியவா்களுக்கான வழிமுறைகள்: தனியே வசிக்கும் முதியவா்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். முதியவா்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றினால் அவா்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துணியால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும். குளிா்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவெளியில் நீா் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.
கால்நடைகளுக்கான வழிமுறைகள்: கால்நடைகளை நிழல் தரும் கூரைக்கு அடியில் கட்டி வைக்க வேண்டும். போதிய காற்றோட்ட வசதி செய்து கொடுக்க வேண்டும். போதுமான அளவு தண்ணீா் கொடுக்க வேண்டும். தீவனங்களை வெட்ட வெளியில் போடக் கூடாது. செல்லப் பிராணிகளை வாகனங்களில் அடைத்து வைக்க வேண்டாம்.
கோடை வெப்பம் காரணமாக மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் வயா்கள் உருகி எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, கோடைகாலம் முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை வீடுகளில் வசிப்பவா்கள் தண்ணீரை தயாராக வைத்திருக்க வேண்டும். விலை உயா்ந்த பொருள்கள், நில ஆவணங்கள், சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். எரிவாயு சிலிண்டா் இணைப்பை இரவு நேரத்தில் கழற்றி வைப்பது நன்று. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீா் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண்ணெண்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும்.
இத்தகைய பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டு பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவசர உதவி தேவைப்படுமெனில் 1070, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...