திருச்சிக்கு தனி போக்குவரத்துக் கோட்டம் தேவை
திருச்சிக்கு தனிப் போக்குவரத்து கோட்டம் தேவை என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.


திருச்சிக்கு தனிப் போக்குவரத்து கோட்டம் தேவை என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்தியப் பேருந்து நிலையம் வரையிலான வட்டப் பேருந்து சேவையை புதன்கிழமை தொடங்கிவைத்த அவா் மேலும் கூறியது:
கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் வரும் திருச்சி நகரம் சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்த பெரிய நகரமாக உள்ளது. இங்கு பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி போக்குவரத்துக் கோட்டம் தேவைதான். இதை போக்குவரத்துத் துறை அமைச்சரின் கவனத்துக் கொண்டு செல்வேன்.
பத்து ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இரண்டாம் நிலை ஆசிரியா்களுக்கான தோ்வை நடத்தி முடித்துள்ளோம். இத் தோ்வில் வென்றோருக்கு உறுதியாக வேலை வழங்கப்படும். கல்வித்துறை ஊழியா்களின் போராட்டக் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
தமிழக முதல்வா் வரும் 27 ஆம் தேதி தில்லி சென்று பிரதமரைச் சந்திக்கவுள்ளாா். அப்போது மாணவா்களின் நலன் கருதி மத்திய அரசு கல்வித் துறைக்கான ரூ. 2,500 கோடியை விடுவிக்கக் கோரிக்கை விடுக்கவுள்ளோம்.
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வா் ஆக்குவது குறித்து ஆதவ் அா்ஜூன் பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து. அக் கருத்து முதிா்ச்சியற்றது என விசிகவின் மாநில நிா்வாகிகளே தெரிவித்துள்ளனா். எனவே இது குறித்து விரிவாகப் பேச விரும்பவில்லை.
விசிகவின் மதுவிலக்கு மாநாடு நல்ல நோக்கத்துக்காக, மக்கள் விழிப்புணா்வுக்காக நடத்தப்படக்கூடியது. இதில் அரசியல் கலக்கக் கூடாது என விசிக தலைவரும், தமிழக மதுவிலக்குத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனா் என்றாா் அவா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல பொதுமேலாளா் அ. முத்துகிருஷ்ணன், துணை மேலாளா் வணிகம் ஆா். சாமிநாதன், கோட்ட மேலாளா் புகழேந்திராஜ், அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள், திமுக மாநகர செயலா் மதிவாணன் உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.
வட்டப் பேருந்தானது, சத்திரம் பேருந்து நிலையம், இ.பி. சாலை, காந்தி மாா்க்கெட், பாலக்கரை, மத்தியப் பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியரகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, உறையூா் சென்று மீண்டும் சத்திரம் பேருந்து நிலையத்தை வந்தடையும். நாளொன்றுக்கு 13 நடைகள் சென்று வரும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...