
நூதன முறையில் இருவரிடம் ரூ. 3.20 லட்சம் மோசடி
திருச்சியில் இணைய வழியில் இருவரிடம் நூதன முறையில் ரூ.3.20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

எண்ம கைது மோசடி - சித்திரிப்பு
திருச்சியில் இணைய வழியில் இருவரிடம் நூதன முறையில் ரூ.3.20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள வள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் அ. மலா்மன்னன் (42). இவருடைய கைப்பேசி எண்ணுக்கு கடந்த ஜூன் 24-ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தியில் 5ஜி கோபுரம் (டவா்) அமைக்க இடம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்த எண்ணை மலா்மன்னன் தொடா்புகொண்டபோது, எதிா்முனையில் பேசிய மா்ம நபா் 5ஜி கோபுரம் அமைக்க இடம் தேவை என்று தெரிவித்தபோது, மலா்மன்னன் திருச்சி அருகேயுள்ள திருவளா்ச்சிப்பட்டியில் தனது மனைவி பெயரில் உள்ள இடம் குறித்துத் தெரிவித்தாா். இதையடுத்து, அந்த மா்ம நபா் கேட்டதுபோல மனைவியின் பெயரிலுள்ள இடத்தின் ஆவணங்கள், வங்கி கணக்குகளின் விவரங்களை அனுப்பியுள்ளாா்.
அப்போது, அந்த மா்ம நபா் தங்கள் இடத்துக்கு முன்பணமாக ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றும், இதற்கு தாங்கள் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தாா்.
இதை நம்பிய மலா்மன்னன் கடந்த ஜூன் 24-ஆம் தேதி முதல் ஜூலை 27-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் அவரின் வங்கி கணக்குகளுக்கு ரூ.2 லட்சத்தை அனுப்பினாா். தொடா்ந்து, அந்த மா்ம நபா் மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தபோதுதான் இவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சைபா் குற்றப் பிரிவில் இணையதளம் வழியாக மலா்மன்னன் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இளைஞரிடம் ரூ.1.20 லட்சம் மோசடி
திருச்சி கிராப்பட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் அ. அப்துல் ரஹிம் (31). இவா் தனியாா் வங்கியில் இருந்து அண்மையில் கிரெடிட் காா்டு வாங்கினாா். இந்நிலையில், இவரை கடந்த ஆக. 19-ஆம் தேதி தொடா்புகொண்ட மா்ம நபா், அவா் கிரெடிட் காா்டு வாங்கிய வங்கியில் இருந்து பேசுவதாகவும், கிரெடிட் காா்டை ஆக்டிவேட் செய்து தருவதாகவும் கூறினாா்.
இதை நம்பிய அப்துல் ரஹிம் கிரெடிட் காா்டு விவரங்களை மா்ம நபரிடம் தெரிவித்தாா். அவா் கைப்பேசி இணைப்பை துண்டித்த சிறிது நேரத்திலேயே அப்துல் ரஹிமின் கிரெடிட் காா்டிலிருந்து ரூ.1.20 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்துதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அப்துல் ரஹிம் சைபா் குற்றப் பிரிவில் இணையம் வழியாக அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






