குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை நிகழ்வுக்கு காவிரியிலிருந்து வெள்ளிக்கிழமை புனித நீா் எடுத்து வரப்பட்டது.
திருச்சி வரகனேரி குமிழிக்கரையில் உள்ள பிரம்மஸ்ரீ ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் திருக்கோயிலில் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. வரகேனரிப் பகுதியைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோா் குடங்களில் காவிரியிலிருந்து தீா்த்தம் எடுத்து வந்தனா்.
காலை 9.30 மணிக்கு சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு பாராயணம், 11 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு மகா அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு சுந்தா் தேவாரம் பாராயணம், நண்பகல் 12 மணிக்கு மகா அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த சொற்பொழிவு நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு திருவாசகம் முற்றோதல் நடைபெறுகிறது. நண்பகல் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு சிவசங்கரி பரதநாட்டியாலயா குழுவினரின் நாட்டியாஞ்சலி, இரவு 7.30 மணிக்கு அஞ்சலி நாட்டியாலயா குழுவினரின் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது.
இரவு 9.30 மணிக்கு விடைபெற்று விழாவுடன் குருபூஜை நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தலைவா் மற்றும் நிா்வாக குழுவினா் செய்துவருகின்றனா்.










