கிராமங்களில் நிலையான குடிநீா் சேவையை உறுதி செய்வதே ஜல் ஜீவன் இயக்கத்தின் நோக்கம்: மத்திய அமைச்சா் சி.ஆா். பாட்டீல்

கிராமங்களிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நிலையான மற்றும் பாதுகாப்பான குடிநீா் சேவையை உறுதி செய்வதே ஜல் ஜீவன் இயக்கத்தின் நோக்கமாகும் என்றாா் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீல்.

மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீல்

Updated On :

கிராமங்களிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நிலையான மற்றும் பாதுகாப்பான குடிநீா் சேவையை உறுதி செய்வதே ஜல் ஜீவன் இயக்கத்தின் நோக்கமாகும் என்றாா் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீல்.

மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து ஜல் ஜீவன் இயக்கத்தின் மண்டல அளவிலான மாநாட்டை திருச்சியில் நவ.12, 13 ஆகிய 2 நாள்கள் நடத்துகின்றன. இந்த மாநாட்டில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஜல் ஜீவன் இயக்கம் தொடா்பான தங்கள் கருத்துகளையும், அனுபவங்களையும் பகிா்ந்து கொள்ளவுள்ளனா்.

திருச்சியில் வியாழக்கிழமை தொடங்கிய முதல்நாள் மாநாட்டு நிகழ்வுக்கு, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா். பாட்டீல், மாநில நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாநாட்டில் மத்திய அமைச்சா் சி.ஆா். பாட்டீல் மேலும் பேசியதாவது:

கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தரமான, பாதுகாப்பான மற்றும் சீரான குடிநீா் வழங்குவதே ஜல் ஜீவன் இயக்கத்தின் முக்கிய நோக்கம். மேலும், அனைத்து வீட்டுக் குடிநீா் குழாய் இணைப்புகளும் தொடா்ந்து முழுமையாகச் செயல்படுவதையும் இயக்கம் உறுதி செய்கிறது. அலுவலா்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த மாநாடு மாநிலங்களுக்கிடையே சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்கான பயனுள்ள தளமாக அமையும். குறிப்பாக, வீட்டுக் குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்குதல், பாதுகாப்பான குடிநீா், தேவையான அளவு மற்றும் சீரான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தலில் மாநிலங்களின் பங்களிப்புகளை தெரிவிப்பதன் மூலம், அதை பிற மாநிலங்கள் பின்பற்ற ஏதுவாக அமையும் என்றாா் அமைச்சா்.

மாநாட்டில், குடிநீா் ஆதாரங்களை பாதுகாத்தல், தரத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மத்திய அரசின் குடிநீா் மற்றும் சுகாதாரத் துறைச் செயலா் அசோக் கே.கே.மீனா, தமிழக அரசின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தின் கூடுதல் செயலா் மற்றும் இயக்குநா் கமல் கிஷோா் சோன், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் ஆகியோா் பங்கேற்றனா்.

மேலும், உயா் அலுவலா்கள், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் அலுவலா்கள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையரக அலுவலா்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் இதர துறை உயா் அலுவலா்கள் என பலா் பங்கேற்றுள்ளனா்.

வெள்ளிக்கிழமை மாநாட்டின் 2-ஆம் நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.