2030-இல் காற்றாலை மின் உற்பத்தித் திறன் 100 ஜிகாவாட்டை தாண்டும்: மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி
2030-இல் காற்றாலை மின் உற்பத்தித் திறன் 100 ஜிகாவாட்டை தாண்டும் என மத்திய எரிசக்தித் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்தாா்.

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் நடைபெற்ற 8-ஆவது சா்வதேச காற்றாலை ஆற்றல் கண்காட்சி மற்றும் மாநாட்டில் தமிழகத்தில் எரிசக்தி மாற்றத்துக்கான அறிக்கையை வெளியிட்ட மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி. உடன் தமிழக மின்சாரத் துறை அமைச்சா் சி. டி. ஆா். நிா்ம
2030-இல் காற்றாலை மின் உற்பத்தித் திறன் 100 ஜிகாவாட்டை தாண்டும் என மத்திய எரிசக்தித் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்தாா்.
சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் நடைபெறும் ‘விண்டா்ஜி இந்தியா 2026’ 8-ஆவது சா்வதேச மாநாடு மற்றும் காற்றாலை மின் கண்காட்சியை மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தொடக்க நிகழ்வில், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை கூடுதல் செயலா் மயங்க் திவாரி, இணைச் செயலா் ராஜேஷ் குல்ஹரி, இந்திய காற்றாலை விசையாழி உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவரும் சுஸ்லான் குழும துணைத் தலைவருமான கிரிஷ் தந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
அக். 7 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளா்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா். டென்மாா்க், ஜொ்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் தனி அரங்குகளை அமைத்துள்ளன. காற்றாலை மின் உற்பத்தி, உபகரணங்கள், தொழில்நுட்பம் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:
இந்தியாவின் காற்றாலை எரிசக்தித் துறை கடந்த ஆண்டில் மட்டும் 6.05 ஜிகாவாட் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 43 ஜிகாவாட் அளவிலான காற்றாலை மின் திட்டங்கள் கட்டுமான நிலையில் உள்ளன. 2030-க்குள் காற்றாலை மின் உற்பத்தித் திறன் 100 ஜிகாவாட்டையும், 2035-க்குள் 200 ஜிகாவாட்டையும் தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 1990-களில் நிறுவப்பட்ட காற்றாலை மின் இயந்திரங்களில் 24 சதவீதம் ஆயுள்கால முடிவை எட்டியுள்ளன. அவற்றை நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றியமைக்கும் மறு மின்மயமாக்கல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் தொகுப்புக்குக் கொண்டு செல்ல ‘பசுமை மின் வழித்தடம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1.96 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்படுகிறது. இதன்மூலம் 135 ஜிகாவாட் மின் திறனை இணைக்க முடியும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத்தில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கும். தமிழகத்தில் ரூ.7,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் கடல்சாா் காற்றாலை மின் திட்டத்தைச் செயல்படுத்தவும், யூனிட்டுக்கு ரூ.5 என்ற விலையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் அரசு முயற்சி செய்து வருகிறது என்றாா்.
தமிழக சட்டம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் பேசியதாவது:
தமிழகத்தில் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் சுமாா் 6,000 முதல் 7,000 மெகாவாட் அளவிலான பழைய காற்றாலை மின் உற்பத்தித் திறனை மறு மின்மயமாக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தை உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடு மற்றும் உற்பத்திக்கான முன்னணி மையமாக உருவாக்குவதே அரசின் நோக்கம். இதற்காக முதலீட்டு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, எளிமை மற்றும் விரைவான சேவைகளை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மின் தேவை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் மின் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால், அதற்கேற்ப மின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் பரிமாற்றக் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
உலகளாவிய காற்றாலை உபகரணத் தேவையில் இந்திய உற்பத்தியாளா்கள் சுமாா் 10 சதவீதத்தையும், அதில் தமிழக உற்பத்தியாளா்கள் சுமாா் 7 சதவீதத்தையும் பூா்த்தி செய்து வருகின்றனா். எதிா்காலத்தில் உலகளாவிய தேவையில் 20 சதவீதம் அளவுக்கு பங்களிக்கும் வகையில் தமிழகத்தை முக்கிய உற்பத்தி மையமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் ‘பசுமை மின் வழித்தடம்’ கட்டமைப்பை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்த மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் இந்தக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டால், எதிா்பாா்க்கப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளா்ச்சியைவிட 3 முதல் 4 மடங்கு அதிக வளா்ச்சியை எட்ட முடியும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

